பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

சோலை சுந்தரபெருமாள்


இந்த அடக்குமுறை தங்கம்மாளுக்குப் பழக்கம். அதற்கு அடி பணிந்துவிடுவதும் அவள் வழக்கம். "எப்படியானும் போங்கோ!” என்று கூறிவிட்டுப் போய் விடுவாள்.

பெண், பிறந்த வீட்டுக்கு வந்ததில் தங்கம்மாளை விடச் சந்தோஷப்பட்டவர் யாரும் இல்லை. ஆசையாக, அருமையாக வந்திருக்கும் பெண்ணுக்கு ஆசார உபசாரம் செய்தாள். ஒரு வேலை செய்ய விடுவதில்லை. ருக்கு வேடிக்கையும் விளையாட்டுமாய்ப் பேசும் போதெல்லாம், அப்படி ஓண்ணும் இதுக்கு அகமுடையானிடம் மனஸ்தாபப்பட்டுக் கொள்ளத் தெரியாது. வெறுமேதான் வீண் கவலை என்று மனசுக்குள் எண்ணமிடுவாள். அந்த எண்ணமே அவளுக்கு எவ்வளவோ ஆறுதலைக் கொடுக்கும். "உனக்கு டொமெட்டோ ரஸமே பிடிக்காதேடி?” என்பாள் பெண்ணைப் பார்த்து.

"அதை ஏன் கேட்கிறே? அவருக்கு டொமெட்டோ ரஸம் இல்லாவிட்டால் சாப்பிட்ட மாதிரியே இருக்காது. இப்போ எனக்கும் அப்படித்தான் பழக்கமாயிடுத்து” என்பாள் ருக்கு.

பேச்சு நெருங்கும். ஒருநாள் நெருங்கியே விட்டது. "அப்படிப்பட்டவனை விட்டுவிட்டுத் திடீர்னு வந்துட்டயே?”

அசம்பாவிதமாக எப்படியோ கேட்டுவிட்டாள் தங்கம்மாள்.

"ஏன் வந்தே என்கிறாயா?”

"ஊஹும். அவனையும் அழைச்சுண்டு ஒரு பத்து நாளைக்கு வந்து இருந்துட்டுப் போகப்படாதோ?”

பாம்பின் கால் பாம்புக்குத் தெரியும். ருக்கு மௌனம் சாதித்துவிட்டாள். "அதுதான் லீவு கிடைக்கல்லேன்னியே” என்று தங்கம்மாளே ஒரு முடிவு கட்டினாள்.

எவ்வளவோ சந்தர்ப்பங்கள்; எத்தனையோ பேச்சுக்கள். தங்கம்மாள் மனக் கவலைக்குப் பரிகாரமாக ஒன்றுமே நேரவில்லை. எதிர்வீட்டுக் குழந்தைகளைத் தங்கம்மாள் அழைத்துக் கொண்டு வருவாள். "குழந்தையிலே இப்படித்தான் துருதுருன்னு இருந்தே நீ” என்பாள், ஒரு குழந்தையைக் குறிப்பிட்டு, அவள் எதற்கு இப்படிப் பேச ஆரம்பிக்கிறாள் என்பது தெரியும், ருக்குவுக்கு. பேசாமல் சிரித்துக் கொண்டே மாடிக்கு எழுந்து போய் விடுவாள்.

தனியாக இருக்கும்போது, இது என்ன அசட்டுக் கவலை என்று தங்கம்மாளுக்கே ஒவ்வொரு சமயம் தோன்றும். மூன்பெல்லாம் எவ்வளவு ஆனந்தமாய், பத்து வயசு இளமைத் தெம்புடன் இருப்பாளோ அந்த மாதிரி ஆகிவிடுவாள். ஆனால் ஏதாவது ஒன்று வந்து சேரும். கவலைப் பின்னல். மீண்டும் துவங்கிவிடும். 'ஏதானும் இல்லாமல் இருக்காது. வந்து இவ்வளவு நாள் ஆகிறதே இல்லாவிட்டால் இவளும் இப்படி இருக்கமாட்டாள். அவனும் இப்படி இருக்கமாட்டான்' என்று