பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தஞ்சைச் சிறுகதைகள்

107


"என்ன வேணும்!” "தாகமாய் இருந்தது.” ருக்மிணி வழக்கம் போலக் கலகலப்பாகத்தான் நடந்து கொண்டாள். அவள் மனத்தில் தங்கம்மாள் கூறிய வார்த்தைகள் உறுத்திக் கொண்டே இருந்தன. வேணுமீது தான் அவளுக்குக் கோபம் கோபமாய் வந்தது. பதிலே போடாமல் இருந்தாள். தினம் பத்தரை மணி ஆகும் போதெல்லாம் தபால்காரன் வரும் திசையை நோக்கி அவள் கண்கள் மட்டும் வட்டமிடத் தவறுவதேயில்லை.

"தபால் இல்லையே? என்று ஏதோ வேண்டாத தோரணையில் கேட்பாள்.

"இல்லேம்மா" என்று ஏதோ ஆறுதலாகச் சொல்வது போன்ற பாவத்தில் தபால்காரன் பதிலளிப்பான்.

"அவர் ஏன் போடப் போகிறார்?” என்று அவள் தனக்குள் கூறிக் கொள்வாள்.

பத்து நாட்கள் சென்றன. திடீரென்று வேணுவிடமிருந்து கடிதம் வந்தது. "லீவு கிடைக்கவில்லை. உடனே ரங்கனை அழைத்துக் கொண்டு வந்து சேரவேண்டும்.”

ருக்கு கடிதத்தை அசுவாரசியமாய் மடித்துப் போட்டாள். தங்கம்மாளுக்குத் திருப்தி பிறந்தது. "அவன்தான் வரச் சொல்லி எழுதியிருக்கான் போலிருக்கே. ஏன் வருத்தப்படறே?” என்று கேட்டாள்.

"ரங்கன் என்ன வச்ச ஆளா, அழைச்சிண்டு வறதுக்கும் கொண்டு போய் விடறதுக்கும்?" என்றாள் ருக்கு ஆத்திரத்துடன். பெண்ணின் இந்தக் கோபம் தங்கம்மாளுக்கும் அர்த்தமாகவே இல்லை.

பல மாதங்களுக்குப் பிறகு தன் பெண் பிரியமாய் இரண்டு மாதம் தன்னிடம் வந்திருக்கிறாளே என்ற ஆசையே சப்பிட்டுவிட்டது தங்கம்மாளுக்கு.

“பதில் போட வேண்டாமா?” "ஒண்ணும் வேண்டாம்.” மேலும் ஒரு வாரம் சென்றது. தந்தி வந்தது; "இரண்டு நாளில் எதிர்பார்க்கிறேன்." தங்கம்மாளுக்குத்தான் தவிப்பாய் இருந்தது. கிணற்றில் கல் போட்டது போல இருந்தாள் ருக்கு.

"தந்தி அடிச்சிருக்கானே” என்றாள் தங்கம்மாள். கிளம்பு என்று பெண்ணைப் பார்த்துத் தைரியமாய் அவளால். சொல்ல முடியவில்லை. எப்படிச் சொல்வது?

"உடம்பு சரியாய் இல்லை. சரியாய் ஆனதும் உடனே வருகிறேன்.” என்று ருக்கு யாருக்கும் தெரியாமல் பதில் எழுதிப் போட்டாள். அப்பாவிடம், “இன்னும் பத்து நாள் போகட்டுமே,