பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இவர் வழியிலேயே வந்த மாயூரம் எஸ்.ஏ. ராமஸ்வாமி ஐயர் மர்மங்கள். மாறுவேடங்கள். எதிர்பாராத சந்திப்புகள் முதலிய அம்சங்களுடன் நடப்பியல் சூழ்நிலையோடு கிட்டத்தட்ட 12 நாவல்கள் எழுதியுள்ளார். இவற்றில் ‘நீலகண்டன்’ குறிப்பிடத்தக்கது. இதே நாவலில் தான் மாயூரம் கடைவீதி மற்றும் அதன் கற்றுப்புறங்களைச் சார்ந்த மக்களின் வாழ்வியலை மையப்படுத்தி எழுதிக்காட்டியுள்ளார்.

அதே காலத்தில் சமகால சமுதாயத்தின் ஊழல்களையே முக்கியக் கருப்பொருளாக வைத்து எழுதியவர்களில் முதன்மையானவர் நாகை கோபாலகிருஷ்ணன்பிள்ளை ஆவார். இவர் எழுதிய 'தனபாலன்' குறிப்பிடத்தக்க நாவலாகும். அப்போதே அந்த நாவலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அதனால் அதனை அடுத்து வெளிவந்த ‘அலைகடல் அரசி’ என்னும் நாவலில் தன் நோக்கத்தையும் சுட்டிக்காட்டி எழுதியுள்ளார்.

அந்தச் சூழலில் தமிழ் நாவல்களில் கொச்சை மொழியும் அனாவசியமாக சமஸ்கிருத சொற்களைத் தேவையற்ற இடங்களில் பயன்படுத்துவதும் முறையல்ல என்று குரல் கொடுத்த மறைமலையடிகள் ஓர் ஆங்கில நாவலைத் தழுவி ‘குமுதவல்லி’யைச் செந்தமிழ் நடையிலேயே எழுதியுள்ளார். இந்தத் தழுவல் நாவல், இலக்கியத்திற்குப் பெரியதாகப் பங்களிப்புச் செய்யவில்லை என்று கூறுபவர்கள் கூட அவரின் ‘கோகிலாம்பாள் கடிதங்கள்’ நவீனத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளனர்.

இன்று பெரிய அளவில் பேசப்பட்டு வரும் தலித் பெண்ணிய இலக்கியக் கொள்கையில் அடங்கிவிடும் நாவலை 1936 லேயே தஞ்சை மாவட்டம் - மயிலாடுதுறை - மூவலூர் ராமாமிர்தம்மாள் ‘தாசிகளின் மோசவலை’ என்ற பெயரில் எழுதியுள்ளார். இந்த நாவல்தான் தமிழ் நவீன இலக்கியத்தில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் தோன்றிய ஒரு பெண் எழுதிய முதல் பெண்ணிய தலித்திய நாவலாகக் கொள்ளலாம்.

இருபதாம் நூற்றாண்டின் இறுதி காலக்கட்டத்தில், தற்போது வாழ்நிலையில் தஞ்சை மக்களின் வாழ்க்கை முறைகளை நாவலில் பதிவு செய்து வருபவர்களின் குறிப்பிடத்தக்கவர்கள் - எம். வி. வெங்கட்ராம், இந்திரா பார்த்தசாரதி, ‘செம்மலர்’ கே. முத்தையா, சா. சந்தசாமி, தஞ்சை பிரகாஷ், சி.எம். முத்து, சோலை சுந்தரபெருமாள், பாவைசந்திரன் போன்றவர்களைக் குறிப்பிடலாம்.