பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

சோலை சுந்தரபெருமாள்


என்ன அவசரம்?” என்று வலியச் சென்று கூறினாள். "ஆமாம், ஆமாம்; போகட்டும்” என்றார் அவரும்.

"நல்ல அப்பா, நல்ல பொண்ணு! நெஞ்சழுத்தத்தில் ஒன்றுக்கொன்று சளையில்லை” என்று தோன்றிற்று தாய்க்கு, ஊருக்குப் போகவேண்டும் என்ற பிரஸ்தாபத்தையே காணவில்லை.

"என்னமோ ஏதோ, பகவானே! என் மனசு குளிர எல்லாம் நடக்கணும். உன் உடல் குளிரப் பாலாபிஷேகம் பண்ணுகிறேன்” என்று அந்தர்யாமியைக் குறித்து வேண்டிக் கொண்டாள்.

ருக்கு மேலுக்குப் பிகுவாய் இருந்தாள். அவள் நடவடிக்கையில் ஒரு தளர்ச்சி இருந்தது. சிடு சிடு என்று விரைவில் சீற்றங்கொள்ள ஆரம்பித்தாள். தாயின் உபசாரமே அவளுக்குக் கசந்தது. வேண்டா வெறுப்பாக அவள் தாயிடம் தலை பின்னிக் கொள்ள உட்காருவாள். என்ன அம்மா தலையைப் போட்டு வெட்டறே?” என்று உடனே சிணுங்குவாள்.

காற்று அடிக்கவில்லை என்று கோபம் வந்தது. பேய்க் காற்றாக வீசினாலும் கோபம் வந்தது. தாகமாய் இருந்தால் கோபம். தூக்கம் வராவிட்டால் கோபம். சலங்கை ஒலியுடன் வண்டிகள் ஓடினால் சலிப்பு. வண்டிச் சப்தமே கேட்காவிட்டால் ஒரே ஏக்கம்.

“எதிர்பார்க்கிறாராம்; எதிர் பார்க்கட்டுமே!” பல தடவை இப்படித் தனக்குள் அவள் கூறிக் கொண்டாள். தானும் இரண்டே வரியில் பதில் எழுதிப் போட்டு விட்டதில் அவளுக்கு உள்ளுறத் திருப்தி. ஆனால் உடம்பு தனக்கு எப்போது சரியாகும்? அது எப்போது முதல் சரியாய் இல்லாமல் போக ஆரம்பித்தது?

'வந்ததிலேயிருந்தா?'

நிலா அன்று பால்போலக் காய்ந்து கொண்டிருந்தது. வேண்டிய அளவு காற்றும் வீசிக் கொண்டிருந்தது. ஆனாலும் ருக்குவுக்குத் தூக்கமே பிடிக்கவில்லை. வந்ததிலேயிருந்து உடம்பு சரியாய் இல்லை என்று சொல்வது பிசகு; மனசு சரியாய் இல்லை என்பது தான் சரி என்று எண்ணமிட்டாள் அவள்.

வேணு மிகவும் அழுத்தக்காரன் என்பது பிரசித்தம். ஆனால் அவள் மட்டும்? தக்காளிப் பழ ரசம் பழக்கமானதைப் போலத்தான் அந்த அழுத்தம் அவனிடம் கற்றுப் பாடமானது தான்.ஏதோ வெளியில் சொல்லிக்கொள்ள முடியாத மனஸ்தாபம். "யார் வீம்புதான் செல்லுகிறது, பார்ப்போமே!' என்று நிச்சயம் தான் தோற்றுவிட்டதாக ருக்கு உணர்ந்தாள். பெண்களாகப் பிறந்தாலே தோல்விதான்.

தொலைவிலே, தெருவிலே முனிசிபாலிடி ஆட்சியை எதிர்த்து ஒரு சொறிநாய் ஊளையிட்டது. அதைக்கேட்டு மற்றொன்று 'வாள் வாள்' என்று குலைத்தது. அரை மணி