பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தஞ்சைச் சிறுகதைகள்

109


நேரமாய்ச் சத்தம். அடங்கவே இல்லை. ருக்கு நிலவையே கவனித்தபடி படுத்துக் கொண்டிருந்தாள். தூக்கம் வந்தால்தானே, இந்தச் சத்தத்தில் கலைந்து போவதற்கு?

"ருக்கு!" என்று கூப்பிட்டுக் கொண்டே வந்தாள் தங்கம்மாள்.

“உம்” என்றாள் ருக்கு. "இந்தச் சத்தத்திலே முழிச்சுண்டயா?” "தூக்கமே வரல்லேம்மா; ஊருக்குப் போனாத்தான் இனிமே" என்றாள் ருக்கு வாயை விட்டு. தங்கம்மாள் மனசு கரைந்து ஓடிவிட்டது. "அசடே! நாளைக்கே போகலாம்; தூங்கு” என்றாள். 'ஜல் ஜல்' என்று தெருவில் வண்டிகளின் சப்தம்.

"பன்னிரண்டரை மணி வண்டி வந்து விட்டது போலிருக்கு. தாகமாய் இருந்தால் தண்ணீரைச் சாப்பிட்டு விட்டுத் தூங்கு” என்றாள் தங்கம்மாள்.

வழக்கம்போல ருக்கு தண்ணீர் எடுக்கும் பாவனையில் வண்டிகளைப் பார்க்க ஜன்னலருகில் வந்து நின்றாள். கீழே வாசற்படியைத் தாண்டாமல் ஒரு வண்டி வந்து நின்றது.

"அம்மா, இங்கே வாயேன்! வாசல்லே வண்டி வந்து நிக்கறது. அவர்தான் போலிருக்கு. ஆமாம், அவர்தான்! போ ஜல்தியாய்!” என்று விரட்டினாள். தடதடவென்று விளக்குகளைப் போட்டாள். 'லீவு கிடைத்து விட்டது போலிருக்கு' என்று கண்ணாடியின் முன் வளைய வந்து நின்றாள்.

கூச்சமும் குறுகுறுப்பும் முந்த அவள் மாடிப்படியை விட்டுக் கதவு ஓரமாய் வந்து தயங்கி நின்றாள்.