பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தஞ்சைச் சிறுகதைகள்

113


பிரகாரம் வெறிச்சென்று கிடந்தது. நந்திக்கருகில் அர்த்த ஜாமத்துக்காக காத்துக் கொண்டிருந்த இரண்டு ஆச்சிகள், தூங்கி வழிந்து கொண்டிருந்தார்கள். இரண்டு பேருக்கும் முண்டனம் செய்து முக்காடிட்ட சிரசுகள். பழுத்துப் போன வெள்ளைப் புடவை. நெற்றியில் விபூதி. பல்லும் பனங்காயுமாக மூஞ்சிகள். தோலில் சுருக்கம், பட்டினியும், பசியுமாக காயக் கிலேசம் செய்கிறார்களோ என்னமோ, இரண்டுபேரும்! இல்லாவிட்டால் ஐம்பது வயசுக்குள், இத்தனை அசதியும் சோர்வும் வருவானேன்? மனிதப் பிறவி எடுத்து சுகத்தில் எள்ளளவு கூட காணாத ஜன்மங்கள் இரண்டும், மங்கைப் பருவத்திற்கு முன்னாலேயே குறைபட்டு போனவர்களாம். பரஸ்பர அனுதாபத்தினால் ஒரு சிநேகம். இரண்டு பேரும் சேர்ந்து தான் வருவார்கள்; போவார்கள்- விருப்பு வெறுப்பு இல்லாத மரக்கட்டைகள்; உணர்ச்சி மாய்ந்துபோன மரப் பின் உருவாக, சாவை எதிர்நோக்கிக் கொண்டிருந்த கிழங்கள்.

அவர்களைக் கடந்து போனதும், தர்மு உள்ளே சிவ சன்னதியில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது.

"உன்னைவிட இந்த இரண்டும் எவ்வளவோ கொடுத்து வைத்தவை. முக்காடிட்டுக் கொள்கிற பாக்யமாவது இவர்களுக்கு இருக்கிறது. நீ வெறும் சுமங்கலிக்கட்டை" என்று தர்முவை நினைத்து என் நெஞ்சு குரல் கொடுத்தது.

நான் உள்ளே போனதும் சட்டென்று திரும்பி என்னைப் பார்த்து விட்டாள் அவள். உடனே வேதனையையும், வெட்கத்தையும் ஒரு புன்சிரிப்பில் புதைத்துக் கொண்டு 'விர்'ரென்று அந்த இடத்தை விட்டுப் பறந்து விட்டாள். கட்டுக்கூந்தல் அவளுடைய பிடரியில் புரண்டு கொண்டிருந்தது. முன் தலை பக்கவாட்டில், ஒன்றோடும் சேராமல், பறங்கிக் கொடியின் பற்றுச் சுருளைப்போல இரண்டு சுருள்கள் அவள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஆடி அதிர்ந்து கொண்டே வந்தன. அவளை கறுப்பு என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் அட்டைக்கரி அல்ல. மெல்லிய உயரமான தேகம். கையில் நாலைந்து ஜோடி இருக்கும். மஞ்சளும் நீலமும் கலந்த ரப்பர் வளையல்கள். கழுத்தில் முலாம் தோய்ந்த சங்கிலி. அதுவும் முலாம் தேய்ந்து பல்லை இளித்தது. ஒரு பூப்போட்ட வாயில் புடவை. பளபளவென்று தங்க நிறத்தில் கைக்கு வழுவழுக்கும் செயற்கைபட்டு ரவிக்கை. நிகு நிகுவென்ற ஒரு புது மெருகு அந்த உடல் முழுதும் ஊடுருவி ஒளிர்ந்தது.

என்னைக் கண்டுவிட்டு அவள் வெட்கி ஓடியதற்குக் காரணம், இது. இரண்டு மாதத்துக்கு முன் இரண்டாங்கால பூஜைக்குப் பிறகு கோவிலுக்குப் போன போது நடந்தது. பிரகாரத்தை வலம் வருவதற்காகச் சென்றேன். துர்க்கை