பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



1920 ஆம் ஆண்டு தொடங்கி ஆங்கில் நாவல்களைத் தழுவி எழுதிவந்த வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஒரு புதிய முயற்சிக்கு முன்னோடியாக இருந்திருக்கிறார். அவர் எழுதிய நாவல்கள் தழுவலாக இருந்தாலும், தமிழ்நாட்டு இடப்பெயர், மக்கள் பெயர்களை வைத்து, ‘தமிழில்’ சுய படைப்புகள் போல எழுதப்பட்டுள்ளன. இதனால் பரந்துபட்ட வாசக உலகத்தை அவரால் கைப்பற்ற முடிந்தது. நாற்பத்தேழு தடிமனான நூல்களை அவர் எழுதிக் குவித்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் ‘கண்டமேனிக்குக் கதை எழுதும் எழுத்தாளர்களை உற்பத்தி செய்தது இந்த வடுவூரார் தான்” என்று க.நா.சு. குறிப்பிடுகிறார்.

இவரைப் பின்பற்றி எழுதிக்குவித்து இன்று ஒரு வாசக வட்டத்தைக் கைப்பற்றி வைத் திருப்பவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் - சாண்டில்யன், மணியன், பி.சி. கணேசன், பாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர்.... உத்தமசோழன்.

தமிழ்மொழியில் நாவல் பிறந்தது, ஆங்கிலம் நாவல் தோன்றி நூற்றாண்டுகள் கழித்துதான், தமிழ்நாவல் தோன்றி 50 ஆண்டுகள் கழித்தே சிறுகதை ஒரு தனியான இலக்கிய வடிவம் என்ற உணர்வுடன் அங்கீகரிக்கப்பட்டது என்று சிட்டி சிவபாதசுந்தரம் கூறுவதை ஏற்றுக் கொள்ளலாம். வ.வே.சு ஐயரும், மாதவய்யாவும் மறைந்த பின்னர் மணிக்கொடி மூலம் பெயர் பெற்ற புதுமைப்பித்தன் முதலியோரைக் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். இந்த இடைப்பட்டப் பத்தாண்டு காலத்தில் சிறுகதை பற்றி குறிப்பிடும் படியாக எதுவும் வெளியானதாகச் சொல்வதற்கில்லை என்று குறிப்பிடுபவர்களை ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை. இது ஆராயப்பட வேண்டியக் கூற்று என்று ‘தமிழில் சிறுகதை தோற்றமும் வளர்ச்சியும்’ கட்டுரையாளர்கள் கூறியிருப்பது நியாயமாகப்படுகிறது.

காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்த கா.சி. வேங்கடரமணி வேளாண்மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாறுதல்களை பின்னணியாகக் கொண்ட ‘முருகன் ஓர் உழவன்' என்ற நாவலை எழுதி வெளியிட்ட பின் அவர் செய்த சோதனை முயற்சியான சிறுகதை வடிவத்தையே நாம் தமிழில் சிறுகதை வடிவத் தொடக்க காலமாகக் கொள்ளலாம். அதற்கு நிறைய சான்றுகள் உள்ளன.

“மாயூரம் புத்தமங்கலத்தில் பிறந்த ‘கல்கி’ரா. கிருஷ்ணமூர்த்தி, நவசக்தி, விமோசனம், ஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகள் மூலம் சிறுகதை இயக்கத்திற்கு ஊக்கமளித்தார். அவரைத் தவிரவும் அந்தக்