பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

சோலை சுந்தரபெருமாள்


யாரு தலைலே விழலாம்னு காத்திண்டிருக்கு. சாமா இருக்கிறபோது அக்கிரகாரத்திலே இருக்கிறவர்களுக்கு தோசைக்கு இட்லிக்கு அரைச்சுக் கொடுப்பா. ஒரு கல்யாணம் ஒரு விசேஷம்னா இட்லி வார்க்கிறது, அப்பளம் இட்டுக் கொடுக்கிறது இப்படி எதாவது காரியம் செஞ்சு கொடுப்பா. ஆனா ஒரு தினுகங்கிற சேதி தெரிஞ்சுதோ இல்லியோ? எல்லாம் நின்னு போச்சு. ஒரு வீட்டிலேயும் குத்துச் செங்கல் ஏற விடலே. கடைத்தெருவிலே ஹோட்டல்லெ வேலை செய்யறதுகள்...”

எதிர்பார்க்கவில்லை. அவர் மனத்தையே கரைக்கிறதானால் உண்மைதான் கரைக்க முடியும்.

அவர் சொன்னது உண்மைதான். கெளரி சொன்னதும் உண்மைதான். எதிர்பாராத இடங்களிலெல்லாம் அந்த பெண்ணைப் பார்த்து மனம் துணுக்குற்றது. இரவு ஒன்பது மணிக்கு நடமாட்டம் இல்லாத தெருவில் போய்க்கொண்டிருப்பாள். போலீஸ் கான்ஸ்டபிளோடு ஸ்டேஷன் வாசலில் பேசிக் கொண்டிருப்பாள். வெற்றிலைக்காரனோடு ஹாஸ்யத்தில் ஈடுபட்டிருப்பாள். இரவில் தேர்முட்டியின் கருநிழலில் நின்று கொண்டிருப்பாள். வாடகை கார் ஷெட்டின் முன்னால் நின்று சிரித்து பேசிக் கொண்டிருப்பாள்.

கெளரியிடம் சொன்னேன்.

“கெளரவம் என்ன? மதிப்பு என்ன இதிலே? பொம்மனாட்டி ஜென்மம். எத்தனை நாளைக்குத் தேடிண்டு வருவா? முதல்லே அப்படித்தான் இருந்திருக்கும். இப்போ இவளே தேடிண்டு போற காலம் வந்துடுத்து. இல்லாட்டா இப்படி சந்தி சந்தியா நிப்பானேன்? இனிமேல் ஒரே வேகமாத்தான் போகும். வியாதி, ஆஸ்பத்திரி, பிச்சை, சத்திரத்து சாப்பாடு-எதைத் தடுக்க முடியும்? துர்க்கை அம்மன் கிட்டவே வந்து பிழைப்புக்கு மன்றாடற காலம் வந்துவிட்டது.

“கேக்கறதுதான் கேட்டாளே பணம் வேணும்-கஷ்டம் விடியனும்னு அழப்படாதோ? நல்ல ஆளை பிடிச்சுத் தரணும்னு தானா கேக்கணும்.”

“அவ வேலை செஞ்சு பிழைக்கிறவ. ஒரு வேலையும் செய்யாமல் திடீர்னு பணம் வந்து குதிக்கும்னு நம்பற இனம் இல்லே. ஏதாவது கொடுத்தாத்தான் இந்த உலகத்துக்கிட்ட இருந்து ஏதாவது கறந்து சாப்பாட்டுக்கு வழி பண்ணிக்க முடியும்னு நினைக்கிறவ. தெரிஞ்சுதா?”

“என்ன தெரிஞ்சுதா? இது ஒரு வேலையா?” கெளரியின் சாமார்த்தியத்தைக் கண்டு எனக்கு வியப்பாக இருந்தது. வீட்டில் இருந்துகொண்டே அவள் எப்படி செய்திக்களஞ்சியமாக அபிப்பிராயக் களஞ்சியமாக விளங்குகிறாள்?

“இனிமே ஒரே வேகமாகத்தான் போகும்...”