பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தேவகியின் திருமணம்


பலைகள் அழகாலே அழிந்ததும், அரிகளை அம்பாலே அழித்ததும், அகதிகளை அருளாலே அளித்ததும், தக்கார்க்குத் தக்க கருவிகளையுடையாராய் விளங்கும் சக்ரவர்த்தித்திருமகன் கதாப்பிரவசனம் இன்றோடு முடிவு பெறும். நிகழ்த்தியவரோ பிரசித்தி பெற்ற உபந்தியாசகர் மதுராந்தகம் உபய வேதாந்த ஸ்ரீ சுந்தரவரதாச்சாரியார் சுவாமிகள், நிகழ்ந்த இடமோ தர்மரத்னகர ஸ்ரீ ரங்கபாஷ்யம் நாயுடு அவர்களுடைய திருமாளிகை. கேட்கவா வேண்டும்? ஒரு மாத காலமாகக் குதூகல விழாவாகவே இருந்தது. பௌராணிகர் மாதூர்யமும் காம்பீர்யமும் நிரம்பிய குரலில் பெரியவாச்சான் பிள்ளை என்ன, கோவிந்தராஜர் என்ன இப்பேர்க்கொத்த மகானுபாவர்களின் வியாக்யானங்களை அநுசரித்து வெகு நுட்பமான கருத்துக்களைப் பண்டிதர்களும் மெச்சும் வண்ணம் சொன்னார். ஆங்காங்குப் பொருத்தமான கட்டங்களில் மாமியார்-மருமகள் மனஸ்தாபம் பற்றியும், கொடுக்கல் வாங்கல், விஷயங்களில் கோர்ட்டு விஷயங்கள் பற்றியும் நகைச்சுவை ததும்புகின்ற உபகதைகள் பல சொல்லி ஜனரஞ்சகமாகவும் கதைப்போக்கைத் தெளிவு பண்ணினார். கம்பன் காவியத்தில் சடையப்ப வள்ளலுக்கு இடம் கொடுத்தது போல தர்மரத்னகர ரங்கபாஷ்யம் நாயுடுவையும் தம் வாக்கு சாதுரியத்தினால் வைக்கிற இடத்தில் வைத்துப் புகழ்ந்து விடவும் அவர் மறக்கவில்லை. செவிக்கினிய விருந்துக்குப் பிறகு நாவுக்கினிய பகவத் பிரசாதமும் தினம் தினம் கிடைத்துக் கொண்டிருந்தபோது கூட்டத்திற்குக் குறைவேது? இன்று பட்டாபிஷேக வைபவத்துடன் உபந்நியாசம் பூர்த்தியாகும் போது இந்தக் காலச் சம்பிரதாயத்தை ஓட்டி. பாகவதருக்குப் பொன்னாடை போர்த்துவதற்கு ஸ்ரீ நாயுடு ஏற்பாடு செய்திருந்தார். மந்திரி மகேச குமார சர்மா தலைமை வகிக்க இசைந்து வந்திருந்தார். நகரத்திலுள்ள பிரமுகர் அனைவரும் பிரசன்னமாகியிருந்தனர்.

ஜாஜ்வல்யமாக ஒளியலங்காரம் செய்திருந்த மேடையின் மேல் பாகவதர் துவாச நாமங்களும், அகலக்கரையுள்ள