பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

சோலை சுந்தரபெருமாள்



3

டாக்டர் வந்து போன பிறகு அரைமணி நேரம் கழித்து ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு வந்தாள் நாயுடு அவர்களின் மனைவி நாச்சியாரம்மாள்.

“ஜூரம் வந்துவிட்டதாமே! எனக்கு இப்போதுதான் தெரியும். இந்தப் பெண் நர்ஸாம். டாக்டர் அனுப்பியிருக்கிறார்” என்றாள் நாச்சியாரம்மாள். நாயுடுவின் நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள்.

“நல்ல காய்ச்சல். மருந்து கொடுத்தாரா டாக்டர்?” என்றாள்.

“என்னவோ இஞ்செக்ஷன் செய்தார். மார்பிலே பிளாஸ்திரி போட வேண்டுமென்றார்” என்று நாயுடு சொன்னார்.

“காப்பி, ஹார்லிக்ஸ், ஓவல் டின் ஏதாவது சாப்பிடுகிறீர்களா?”

“ஒன்றும் இறங்காது போலிருக்கிறது. சாப்பிட்டால் வாந்தி எடுக்கும் என்று தோன்றுகிறது.”

நாச்சியாரம்மாள், “ஏன் நின்று கொண்டிருக்கிறாய்? நீ செய்ய வேண்டியதைச் செய்யேன். ஏதாவது வேணுமா?” என்று நர்ஸைக் கேட்டாள்.

“இங்கே தான் ஹீட்டர், பம்பு, பாத்திரம் எல்லாம் இருக்றதனால் வேறு எதுவும் வேண்டாம்” என்று நர்ஸ் சொன்னாள்;

சற்று நேரம் நின்றுவிட்டு நாச்சியாரம்மாள் போனாள். நர்ஸ் மருந்தைக் கொதிக்க வைத்துத் துணியில் தடவி நாயுடுவின் மார்பின் மேல் போட்டாள்.

“உடம்பு முழுவதும் வலிக்கிறதே. அதற்கு என்ன செய்யலாம்?” என்று அவளைக் கேட்டார் அவர்.

“இன்ப்ரா ரெட் வெளிச்சம் கொடுக்கச் சொல்லியிருக்கிறார் டாக்டர். காரிலே இருக்கிறது. கொண்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு அவள் வெளியே போனாள்.

ஓர் ஆள் ஒரு மின்சார விளக்கைக் கொண்டுவந்து உள்ளே வைத்தான்; நர்ஸ் அதன் ஒரு முனையைப் ‘பிளக்’கில் செருகி நாயுடுவின் முன் வைத்தாள்.

“இதெல்லாம் வேண்டாம், அம்மா! சொன்ன கேசவலு, கைகால் எல்லாம் பிடித்துவிடு!” என்றார் நாயுடு.

“ஆள் பிடிக்க வேண்டாம். இந்த வெளிச்சம் நல்லது, வலி குறைந்துவிட நல்ல சிகிச்சை” என்றாள் நர்ஸ். வேலைக்காரனைப் பார்த்து, “கொஞ்சம் காப்பி கொண்டா” என்று சொன்னாள்.

அவளுடைய குரல் இன்பம் அளித்தது. அவளுடன் பேசிக் கொண்டிருக்க வேண்டுமென்று நாயுடுவுக்குத் தோன்றியது.