பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

131



“உன் பேர் என்னம்மா?” என்று கேட்டார் அவர்.

“தேவகி” என்றாள்.

“நல்ல பெயராகத் தான் இருக்கிறது. உனக்குக் கல்யாணம் ஆகிவிட்டதோ?”

பதில் இல்லை.

“நான் இப்படிக் கேட்டது தவறா?”

“இல்லை, இல்லை. தவறு என்ன? இன்னும் எனக்கு ஆகவில்லை.”

“ஏன் இன்னும் செய்துகொள்ளவில்லை? இந்தக் கேள்வியும் தப்பு இல்லையே?”

“நீங்கள் பெரியவர். கேட்டால் என்ன தப்பு? போன வருஷம் என் தகப்பனார் செத்துப் போனார். வெகு காலமாய் உடம்பு சுகமில்லாமல் இருந்தார். சம்பாத்தியம் இல்லை. வீட்டின் பேரில் கடன் இருக்கிறது. தம்பி ஒரு பையன் படிக்கிறான். அம்மாவால் என்ன செய்யமுடியும்? தங்கை ஒரு பெண் இருக்கிறாள். நான்தான் இவர்களைக் கவனிக்க வேண்டும்.”

நாயுடு தேவகியின் முகபாவத்தை ஆராய்பவர் போல் நோக்கினார். அவர் எதுவுமே புரிந்து கொள்ள முடியவில்லை. பெண்களை ஏறிட்டுப் பார்த்ததே இல்லை அவர். இதுவரையில் இவ்வளவு நெருங்கி அவருடன் எந்தப் பெண்ணும் உரையாடச் சந்தர்ப்பமே வாய்த்ததில்லை. அறுபது வயது தாண்டி நோய்வாய்ப்பட்ட தருணத்தில் ஒரு பெண்ணுடன் தனிமையில் பேசுகிறபோது சந்தோசம் அவருடைய மனத்தில் உண்டாயிற்று. ஆள் காப்பியைக் கொண்டு வந்தான். ஆற்றி டபராவிலிருந்து தம்ளரில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, தேவகி நாயுடுவிடம் கொடுத்துக் கொண்டிருந்தாள். நாயுடு அமுதமாக எண்ணிப் பருகினார்.

“நீ என்ன படித்திருக்கிறாய்?”

“பள்ளிக்கூடத்தில் ஐந்தாவது பாரம் வரையில் படித்தேன். அதன் பிறகு ஒரு தமிழ்ப் பண்டிதரிடம் பாடம் கேட்டுத் தமிழ்ப் பிரவேசப் பரீஷை எழுதித் தேறினேன். தமிழ்ப் புலவர் பரீஷை எழுத வேண்டுமென்று எனக்கு ஆவல்தான். ஆனால் என்னவோ, ஆஸ்பத்திரியில் ஒருவருஷம் பயிற்சியடைந்து நர்ஸ் ஆனேன். இன்னும் தமிழ் படிக்கவேண்டும் என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறேன். அவகாசம் இல்லை.”

“அப்படியா? படிக்கிறதென்றால் படியேன். நான் உனக்கு ஒத்தாசை பண்ணுகிறேன்.”

“இப்படி யாரும் என்னை அன்புடன் விசாரித்ததில்லை. அபிமானத்துடன் உதவியதில்லை.”

“என்னை உனக்கு முன்னால் தெரியுமா?”

“பார்த்திருக்கிறேன். உங்களைத் தெரிந்து கொள்ளாதவர்