பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

சோலை சுந்தரபெருமாள்


சென்னப்பட்டினத்தில் யாரும் இருக்க முடியுமா?”

நாயுடுவுக்கு நோயின் வேதனை இல்லை. இன்பக் கனவு காண்பது போல இருந்தார். தேவகியின் முகத்தைப் பார்த்தார். அவள் பிச்சோடாவைப் பிணைத்திருந்த வலை அவருடைய மனத்தையும் பிணைத்தது.

‘வயசுக்கும் சமூகநிலைமைக்கும் சம்பந்தம் இல்லாதது காதல் என்று எங்கோ படித்திருந்தார். அதை எண்ணி இப்போது திடுக்கிட்டுப் போனார் நாயுடு, தம்மிடமே அச்சம் அடைந்தார் அவர். அசட்டுப் பிசட்டென்று எதையாவது பேசிவிடுவோமோ என்று மிரண்டார். கண்களை மூடிய வண்ணம் அசைவற்றுப் படுத்துக் கொண்டிருந்தார் அவர்.

“வலி இப்போது குறைந்திருக்குமே! இந்த விளக்கை அணைத்து விடட்டுமா?” என்று கேட்டாள் தேவகி.

‘உம்’ என்று முனகிக்கொண்டே நாயுடு கண்ணைத் திறந்தார். பரிசுத்தமான எழிலுடன் மிளிர்ந்த அந்தப் பூங்கொடியை இமைகள் மூடாமல் நோக்கினார்.

“ஏன் நிற்கிறாய் தேவகி? நாற்காலியில் உட்காரேன். முழங்கையில் வலி இருக்கிறது. அந்த பீரோவில் அமிர்தாஞ்சனம் இருக்கிறது அதை எடுத்துக்கொடு. தடவிக் கொண்டால் வலிக்கு நல்லது.”

தேவகி எடுத்துக் கொஞ்சம் மெழுகை அவருடைய முழங்கையில் தடவினாள்.

“நான் தடவிக் கொள்கிறேன். இங்கே பாட்டிலைக் கொடு” என்று சொல்லிக்கொண்டே கை நீட்டினார் நாயுடு.

“பரவாயில்லை. நானே போடுகிறேன்” என்று தேவகி சொல்லிக்கொண்டே இன்னும் கொஞ்சம் மெழுகை அவருடைய முழங்கையில் வைத்துத் தேய்த்தாள்.

நாயுடுவுக்கு இதமாக இருந்தது.

“நீ திரும்பிப் போக நேரமாகவில்லையா?” என்று கேட்டார் அவர். அவள் அங்கேயே இருந்தால் தமக்குப் புத்தி கெட்டுப்போகும் என்று திகில் அடைந்தார்.

“சாயங்காலம் டாக்டர் வருகிற வரையில் என்னை இங்கே இருக்கச் சொன்னார். மத்தியானம் டெம்ப்ரேச்சர் பார்த்து போன் செய்யச் சொன்னார்.”

நாயுடுவின் மனத்தில் உணர்ச்சிக்கும், சிந்தனைக்கும் பெரிய போர் நிகழ்ந்து கொண்டிருந்தது. ‘ஹே ராமச்சந்திரா! இது என்ன சோதனை? தவறு இழைத்துவிட்டுப் பச்சாத்தாபமடைந்த அகலிகைக்கும் நற்கதி அளித்த பதிதபாவன கருணாமூர்த் தியே! இப்பளவு காலம் புனிதமான வாழ்க்கையிலேயே கழித்த எனக்கு இப்போது தான் இந்த சித்தவிகாரம் உண்டாகிறது?’ என்று எண்ணித் துடித்துப் போனார்.