பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

சோலை சுந்தரபெருமாள்


இருக்கிறாயோ அவ்வளவு அழகியாகவும் இருக்கிறாய்” என்றார் தேவகிக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவளுடைய கண்கள் மருட்சியடைந்தன. நாணத்தினால் முகம் சிவந்தது. தலைகுனிந்து குதிகாலை மையமாக வைத்துக் கால் கட்டைவிரல் பூமியில் வட்டம் போடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘சொல்லக்கூடாததைச் சொல்லிவிட்டோமோ?” என்று தவித்தார் அவரும்,

தேவகி ஜன்னலோரம் போய்க் கீழே உட்கார்ந்துகொண்டு பாரதியார் கவிதைப் புத்தகத்தைப் பிரித்துப் படித்துக் கொண்டிருந்தாள். நாயுடுவின் மனத்தில் எண்ணங்கள் அலையலையாக மோதிக் கொண்டிருந்தன.

மனிதனும் ஒரு மிருகம்தானா? சர்க்கஸில் பயத்தினால் கொடிய விலங்குகளும் கட்டுக்கு அடங்கியிருப்பது மாதிரியே மனிதனும் பயத்தினால் கட்டுப்பாட்டோடு இருக்கிறானா? தெய்வத்தினிடம் பயப்படுகிறான் மனிதன். தீய காரியங்களுக்குத் தண்டனை விதிகளும், அரசாங்கத்தினிடம் பயப்படுகிறான் மனிதன். இந்த மாதிரி பயங்கள் தோன்றாமலே இருந்தால் உலகம் வசிக்கத் தகுதியில்லாததாகவே ஆகியிருக்கும் அல்லவா? மனிதர்கள் தாமாக ஏற்படுத் திக்கொண்ட எல்லாக் கட்டுப்பாடுகளையும் நிலைகுலைக்கும் சண்டமாருதமாக அல்லவா இருக்கிறது இயற்கை வேகம்?

தேவியைப் பார்தார் நாயுடு, ‘சே! கள்ளம் கபடம் இல்லாத பெண்ணல்லவா இவள்? பரம சாத்வீகமாக, நிர்மலமாக, வர்ணசாலைக் கதவைத் திறந்துகொண்டு நிற்கும் சீதாபிராட்டியின் முன் நின்ற ராவணனுக்கு எப்படித்தான் காமவிகாரம் ஏற்பட்டிருக்க முடியும்? என்னைப் போல் அழகின் அழைப்பிற்கும், மனசாட்சியின் அங்குசத் தாக்குதலுக்கும் இடையே அவன் மனம் ஊசலாடிகிறதா? சந்திர, சூரியர்களின்றித் தனியே சந்திப்பொழுதை நள்ளிருள் கிட்டுவதைப் போல, பிராட்டியாரை ராவணன் கிட்டியதாகப் பாகவதர் சொன்ன உபமானம் தான் எவ்வளவு அழகு! என் மனத்தில் எவ்வளவு இருள் மண்டியிருக்கிறது!

“தேவகி”

“ஏன்?”

அவரைப் பற்றி அவள் எதுவும் தவறாக நினைத்துக் கொண்டதாக அவள் குரல் தொனிக்கவில்லை.

“போய்ச் சாப்பிட்டு வாயேன்.”

“பசி இல்லை. காலை வருமுன் ஆகாரம் சாப்பிட்டு வந்தேன்.”

“இல்லை அம்மா! அழைத்துப் போகச் சொல்லட்டுமா?”

“அம்மாவே சாப்பிடக் கூப்பிடச் சொல்லுவார்கள்.”