பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நரிக்குறத்தி

ர்மமிகு தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னைப் பட்டணத்தில் நெடுஞ்சாலையொன்று ரயில் பாதையைக் குறுக்கே வெட்டிக்கொண்டு பாழ் இடமான ஒரு லெவல் கிராஸ்.

அந்த லெவல்கிராஸிங் கதவுகள் வழக்கம்போல் சாத்திக் கிடந்தன. அவை சாத்தப்பெற்ற இரண்டொரு நிமிஷங்களில் ஜனங்கள் வந்து குழுமினர். அப்புறம் வழக்கம்போல் கார், பஸ், லாரி, ரிக்ஷா, ஜட்கா, சைக்கிள் முதலான வாகனாதிகள் போக்குவரத்து விடுதிகளை அனுசரித்து, சாலையின் இடது பக்கங்களில் எதிர்ப்புதிரிட்டு ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நிற்கலாயின. சென்னை நகரமே ஸ்தம்பித்துப் போன மாதிரி ஒரு தோற்றம்.

சங்கீதக் கச்சேரிகளில் புடவை ரகங்களைப் பற்றியபேச்சும், மளிகைக் கடைகளில் ரூபாய்க்குப் பதினாறுபடி அரிசி விற்ற காலத்தைப் பற்றிய பேச்சும், எழுத்தாளர் மாநாடுகளில் தனித்தமிழ், கலப்படத்தமிழ் பற்றிய பேச்சும் வழக்கமாக அடிபடுவதைப்போல, அந்த ரயில்வே கிராஸிங் அருகில் குழுமி நின்ற ஜனங்களிடையே நகரசபை நிர்வாகத்தின் கையாலாகத் தன்மை, சர்க்காரின் பாராமுகம், ரயில்வே போர்டின் அசமந்தம், ஐந்தாண்டுத் திட்டங்களிலுள்ள குறைகள், தேர்தல் கால வாக்குறுதிகள், பற்றாக்குறை பட்ஜட் விவாதப் பிரசங்க நினைவுகள், தனி மனித உரிமைகள், அரசியல் கட்சிகளின் செயல்திறன், கொள்கைக் குழப்பம் முதலானவை பற்றிய வழக்கமான ‘பாஷன் பேச்சுக்கள்’ கிளம்பின. அவரவர்க்குரிய அவசரம், தேவை, காரியம் ஆகியவற்றைப் பொறுத்து, அந்தப் பேச்சுக்கள் ஆத்திரமாகவும், அலுப்பாகவும், சீறலாகவும், சலிப்பாகவும், கோபமாகவும், குத்தலாகவும், குறும்பாகவும் வெளிப்பட்டன. சிலர். வாய்விட்டுப் பேசாமலே முகத்தைச் களிப்பதும், கையைச் சொடுக்குவதும், காலைத் தேய்ப்பதும் பெருமூச்சு விடுவதுமாகத் தமது மன அவசங்களை வெளிக்காட்டினர். மற்றும் சிலர், தங்கள் பொறுமை பறிபோய்க் கொண்டிருப்பதைச் சைக்கிள் மணிகளாலும், ஹாரன்களாலும்