பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெளிப்படுத்தவில்லை. அப்படியே செய்திருந்தாலும் சேற்றில் வாழும் மனிதர்கள் ஒரு ஓரமாகவே நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

நில உடைமையையே மட்டும் உரிமை கொண்ட மேட்டுக்குடி மக்களின் பண்பாட்டுத்தளங்கள் அவர்கள் பேசிய மொழியிலேயே பதிவாகி இருக்கின்றன. கிட்டத்தட்ட இதுதான் தமிழ் என்ற நிலைப்பாடும் நிறுவப்பட்டு வருகிறது.

சமீப காலமாய்ப் பெரும்பான்மை வேளாண் மக்களின் வாழ்க்கைப் பண்பாட்டுக் கூறுகள் அவர்கள் பேச்சுமொழியிலேயே கலைவடிவம் பெற்றுவருகின்றன. அதுபோல அபூர்வமாய் வரும் வெளிப்பாடுகளைக் கண்டு மகிழாமல் இருக்க முடியவில்லை.

ஒட்டுமொத்தமாய் சொல்லும்போது எனது இலக்கிலிருந்து இம்மிகூட பிசகாமல் படிப்பறிவின் துணைகொண்டு; எனது இலக்கியப் பிதாமகர்களான திருவாளர்கள் வல்லிக்கண்ணன், தி.க.சிவசங்கரன் ஆகியவர்களின் வழிகாட்டலோடும், என் இலக்கிய வாழ்விற்குத் திருப்புமுனையாக நின்ற பொன்னிலன், பாவைச் சந்திரன், திருப்பூர் கிருஷ்ணன் போன்றவர்களின் உற்சாகமூட்டலோடும் இத்தொகுப்பைச் செய்திருக்கிறேன். இதைத் தவிரவும் இருபத்தோராம் நூற்றாண்டில் அடிஎடுத்து வைத்துக் கொண்டிருக்கும் இளைய படைப்பாளிகளின் பட்டாளமே ஒன்று உண்டு. அந்த நம்பிக்கைக்குரியவர்களின் பங்களிப்பையும் கவனமாகப் பதிவு செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளேன்.

இத்தொகுப்புக்கு வேண்டிய செய்திகளையும், சிறுகதைத் தொகுப்புகளையும் தேடிச் செல்லும்போது எனக்கு ஆக்கபூர்வமான வழிக்காட்டியாக இருந்த நண்பர்களுக்கு என் நன்றியும் வணக்கமும்....

அன்புடன்
(சோலைகந்தரபெருமாள்)