பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

சோலை சுந்தரபெருமாள்


அரைஞாணில் இறுகித் தொங்கிய கோவணம்; கால்களில் இரும்புக்காப்பு: அழுக்குப் படையால் ‘அட்லாஸ்’ வரைந்து கிடந்த மானிற மேனி. இத்யாதி கோலத்திலிருந்த ஒரு பத்து வயது நரிக்குறவச்சிறுவன் அந்தச் சாலையின் பக்கவாட்டுச் சரிவிலிருந்து பாய்ந்தேறி ஓடி வந்தான்.

கொட்டி வைத்த இடத்திலிருந்து கொண்டு போக வருகிறவன் போல் வெகு அவசரமாக வந்த அவன், அந்தக் சாலையின் இடதுபுறம் நீண்ட வரிசைபோட்டு நின்றுகிடந்த கார்களை நோக்கி விரைந்தான். அவனுடைய இலக்கில் முதலாவதாகச் சிக்கியது ஒரு டாக்சி. அதன் கதவருகில் போய் நின்று காதில் ஒரு கையை வைத்துக் கொண்டு, மறுகையால் உப்பிச்கரந்த சூணாம் வயிற்றைத் தட்டித் தாளமிட்டவாறு பாட ஆரம்பித்தான்.

பாட்டா அது? பத்துப் பதினைந்து சினிமாப் படங்களில் வந்த இருபதுக்கும் மேற்பட்ட பாடல்களின் பல்லவி, அனு பல்லவி, சரணங்களைத் துண்டு துண்டாக நறுக்கியெடுத்து, ஒரு கூட்டுக் கலவையாகத் தொகுத்து நீட்டிய பாடல் அது! இரண்டு மூன்று வார்த்தைகளுக்கு ஓர் இராகமென மாறி மாறி, மடித்து இணைந்து முடிவற்ற விதமாக நீண்டு செல்லும் ஒரு விசித்திர ‘இராக மாலிகை’ அதில் வரும் வார்த்தைகள் அவனுக்கே உரிய ஓசை நயத்துடன் குறுகியும், விரிந்தும், சிதைந்தும், நலிந்தும் வெளியேறினாலும், அவ்வுருவழிந்த வார்த்தைகளை அவன் தான் எத்தளை லாவகமாக, சரளமாகப் பாடுகிறான்! அந்தக் கதம்ப இசைக் கோலத்தோடு அவனுடைய கால்களும் தாளகதியில் ஆடின. ஆனால், பாட்டின் தாளமும், வயிற்றின் மேல்தட்டும் கைத்தாளமும், தரையில் தடம்புரியும் காலின் தாளமும் ஏழாம் பொருத்தத்தில் இருந்தன!

நரிக்குறவச் சிறுவன் உற்சாகமாகப் பாடிக்கொண்டே ஆடினான். அவனுடைய சினிமாக் கதம்ப இசையைக் கேட்டு அங்கு கால்கடுக்க நின்று ஜனங்களிடையே மகிழ்ச்சிக் கலகலப்பு ஏற்பட்டது. கதவு சாத்திக் கிடக்கும் கவலையை மறந்து, அந்த ‘கலைநிகழ்ச்சி’யில் தம் கவனத்தைச் செலுத்தினர்.

பையனின் குரல் கம்மிக் கரகரத்தது. பயின்று வைத்திருந்த பாட்டின் அடிகள் தீர்ந்து போகவே, முடிவை முதலுடன் இணைத்துத் தொடர்ந்து பாடிக்கொண்டே இருந்தான். இடையிடையே. “ஐயா, சாமி! ஒரு பைசா போடு சாமி!” என்று டையலாக்கும் பேசிக்கொண்டான். சாத்திக்கிடக்கும் கதவு திறக்கப்பட்டுவிடுமோ என்ற பரபரப்பும், அது திறக்காமலிருக்க வேண்டுமென்ற ஆதங்கமும் சேர்ந்து அவனுடைய ஆட்டம்பாட்டத்தின் ‘ரிதமை’த் துரிதமாக்கின. அவன் கவனம் பாட்டிலோ, ஆட்டத்திலோ லயிக்கவில்லை, டாக்சியில்