பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

சோலை சுந்தரபெருமாள்


தோன்றியது அவருடைய இந்த செயல்!

இரையைக் கண்டு பாயும் பருந்தைப் போல் பாய்ந்து குனிந்து பையன், அந்த ஐந்து பைசாவை ஆவலுடன் எடுத்தான். அது நல்ல நாணயம்தானா என்று அவனுக்குச் சந்தேகம். கல்லின் மேல் அதைத் தட்டிப் பார்த்துத் திருப்தியடைந்தவனாய் ஒரு துள்ளுத் துள்ளி நிமிர்ந்து அடுத்த காருக்கு விரைந்தான்.

இந்தச் சமயத்தில், சிவப்பு விளக்க அணைந்து, கிராஸிங் கதவுகள் திறக்கப்பட்டன. சாலையின் இரு முனைகளிலும் தேங்கி நின்ற ஜனப்பிரளயம் எதிரும் புதிருமாக அலைமோதிச் சாய்ந்து ஐக்கியமாகி நகர்ந்தது. ‘ஹே’ என்ற இரைச்சல்! சைக்கிள் மணியொலிகளும், கார் ஹாரன் சப்தங்களும் காதைப் பிய்த்தன. முன்னே பாயும் ஜனக் கடலை முந்திக்கொள்ள முடியாமல் கார்களும், பஸ்களும் திக்கித் திணறின. சில கார்கள் ‘ஸ்டார்ட்’ செய்த நிலையிலே உறுமலிட்டபடி நின்று கொண்டிருந்தன. நரிக்குறவச் சிறுவன் முற்றுகையிட்ட காரும் நகர வழியின்றி நின்றது. அது வேண்டுமென்ற பரபரப்புடன், பாட்டையும் ஆட்டத்தையும் துரிதகாலத்தில் ஆரம்பித்தான் பையன்.

புத்தம்புது மெருகுடன், அன்னப் படகுபோல் அழகாக விளங்கிய அந்த நீலநிறக் காரின் கண்ணாடி சன்னல்கள் அனைத்தும் பட்டுத்திரைகளால் மூடப்பெற்றிருந்ததால், உள்ளே உட்கார்ந்திருப்பவர்களைப் பார்க்க முடியவில்லை. ‘டிப் டாப்’பாக டிரஸ் பண்ணிக்கொண்டு முன் சீட்டில் அமர்ந்திருந்த டிரைவர் மட்டுமே தெரிந்தான். பையனுக்கு அவசரம் தாங்கவில்லை. தன் முழுத் திறனையும் காட்டத் துவங்கினான் அவன். காரின் ஜன்னல் வழியே கை நீளுகிறதா என்றும் கவனித்துக் கொண்டான். கையும் நீளவில்லை; திரையும் விலகவில்லை. கார் மெல்ல நகர்ந்தது.

பொறுமையிழந்த பையன் தன் பாட்டையும் ஆட்டத்தையும் நிறுத்திவிட்டு, ‘ஐயோவோசாமி! ஒரு பைசா போடு சாமி’ கேட்டுக்கொண்டே டிரைவர் இருக்கும் பக்கமாகக் குனிந்து காரின் உள்ளே எட்டிப் பார்த்தான். மறுகணம், அங்கு ஏதோ ஒரு பேரதிசயத்தைக் கண்டு திடுக்கிட்டவன் போல் பின்னால் சாய்ந்தான். அதெ சமயம், விருட்டென்று புறப்பட்டுவிட்டது கார்.

வியப்பும் திகைப்புமாகப் பிரமித்து நின்ற நரிக்குறவப்பையன், புஷ்பக விமானம் போல் மிதந்து விரையும் அந்த நீலநிறக் காரையே வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தான். காரின் உள்ளே ஒரு நரிக்குறவப் பெண்ணும், அவன் பக்கத்தில் ஓர் அழகிய நவநாகரீக வாலிபனும் அமர்ந்திருப்பது, பின்புறக் கண்ணாடி வட்டத்தின் வழியே மங்கலாகத் தெரிந்தது!

★★★