பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

143



“ஏய்-ஹே திண்டிகோடா! அத்ரே, கார் பண்டிலே வண்டிகோடி போய்ரே, போய்ரே!”

சாலையில் வலப்பக்கச் சரிவில் ஓடும் பெரிய சாக்கடை வாய்க்காலுக்கு அப்பால், ரயில்வேக்குச் சொந்தமான ஒரு துண்டு நிலத்தில் முளையடித்துப் போடப்பெற்றிருந்த சிறியதொரு கூடாரத்தில் எதிரில் குத்துகாலிட்டு அமர்ந்து, கிழிந்த அணில் வலையொன்றைச் செப்பனிட்டுக் கொண்டிருந்த ஒரு நரிக்குறவ வாலிபன் மெல்லத் தலைநிமிர்ந்து பார்த்தான்.

“ஏ, திண்டிகோடா! குத்ரே கார்பண்டிலே வண்டிகோடி போய்ரே!” என்று இரு கைகளையும் ஆட்டிக்காட்டி உரத்த குரலில் கூவிக்கொண்டே, தலை தெறிக்க ஓடிவந்தான் அந்தக் குறப்பையன்.

திண்டிகோடா என்று விளிக்கப்பட்ட வாலிபன், கையிலிருந்த வலையைப் போட்டுவிட்டு எழுந்து நின்று, தன் எதிரே ஓடிவரும் பையனை உற்றப் பார்த்தவாறு, “எக்க லபியோ மயிலங்கேளடா?” என்று வினவினான்.

இரைப்பு வாங்க ஓடிவந்த பையன், “தத்ரே, கார் பண்டிலே, வண்டிகோடி போய்ரே!” என்று கண்களை அகல விரித்து, வியப்பும் படபடப்புமான குரலில் கூவினான்.

ஒன்றும் புரியாமல் ஒரு கணம் திகைத்து நின்ற திண்டிகோடா, கோபமாக விழிகளை உருட்டிக் கரபுரா வார்த்தைகளில் ஏதோ அதட்டிக் கேட்டான்.

மணிலங்கோடா என்ற அந்தச் சிறுவன், மூச்சுத் திணறத் திணற பல்வேறு அபிநயங்களுடன் சரமாரியாகப் பொரிந்து தள்ளினான். அவனுடைய பேச்சில் ‘கார்பண்டி, வண்டிகோடி’ என்று சொற்களே மிகுதியாக அடிபட்டன.

“ஹே, சங்கிலிகொட்டா!” என்று வானத்தை அண்ணாந்து பார்த்துக் கேவிக்கொண்டே தலையைத் தாங்கிப் பிடித்த வண்ணம் தரையில் அப்படியே உட்கார்ந்து விட்டான் திண்டிகோடா...

கூடாரத்திற்குப் பின்னால், குப்பை கூளங்களைப் போட்டு எரிய விட்ட கல்லடுப்பிலே பானைச் சோறு பொங்கிக் கொண்டிருக்க, அதன் எதிரில் காலை நீட்டி உட்கார்ந்த நரிக்குறவ கிழவியொருத்தி, கம்பி இழையை நறுக்கிக் கருகமணிச் சரம் பின்னியவாறு இந்தப் பேச்சுக்களைக் காதில் வாங்கிக் கொண்டிருந்தாள். ஆனால் அவளுடைய கவனம் முழுவதும் அடுப்பில் பொங்கும் அவியல் சோற்றிலும், உருவாகிவரும் கருகமணிச் சரத்திலுமே லயித்திருந்தது.

தலைமேல் கைவைத்து இடிந்துபோய் உட்கார்ந்திருந்த திண்டிகோடா சட்டென்று எழுந்து, “ஏ...அம்மாடியோவ்! இத்ரே லபோ!” என்று அந்தக் கிழவியைப் பார்த்துக் கத்தினான்.