பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

145


குவளைகளையும் மூலைக்கொன்றாய் வீசியெறிந்தான். பிறகு அடுப்பில் பொங்கிக் கொண்டிருந்த சோற்றுப் பானையைத் தூக்கி மடேரென்று தரையில் போட்டு உடைத்தான். அவியல் சோறு நாலா பக்கமும் சிதறித் தெறித்தது.

இதைக் கண்ட கிழவிக்கு உயிரே போவது போலாகிவிட்டது. வாயிலும் வயிற்றிலுமாக ‘லபோ, திகோ’ என்று அடித்துக் கொண்டு ஓடி வந்தவள், வெறி பிடித்த மாதிரி அந்த வாலிபக் குறவனைப் பிய்த்துப் பிறாண்டினாள். திண்டிகோடாவின் கோபம் உச்சநிலையை அடைந்தது. அவன் அவளைக் கண்மூக்குத் தெரியாமல் அடித்து நொறுக்கினான். புழுதியில் விழுந்து புரண்ட கிழவி, நாய்க்குட்டிபோல் ஓலமிட்டுப் புலம்பினாள். மேலும், அவளை அடித்துப் புடைக்க, கீழே கிடந்த ஒரு கம்பை எடுத்துக்கொண்டு பாய்ந்தான் நரிக்குறவன்.

★★★

டேய். டேய்! இன்னாடா இங்கே கலாட்டா?” என்று கேட்டுக் கொண்டே, சாக்கடைப் பாலச் சுவரின் மேல் உட்கார்ந்திருந்த ஒருவன் இறங்கி ஓடிவந்தான். அவன் அங்கே நடைபாதையில் கடைவிரித்துப் பழ வியாபாரம் செய்பவன்.

திண்டிகோடா தன் கையிலிருந்த கம்பை வீசியெறிந்து விட்டுத் திரும்பினான். பழக்காரனைக் கண்டதும் அவனுடைய சீற்றம் சிறிதே தணிந்தது.

வேட்டியை உள்வட்டமாக மடித்து இடுப்பின்மேல் விட்டுக்கொண்டு கால்களைப் பின்னி ஒருக்களித்துச் சாய்ந்து நின்றவாறு, பீடியைப் பற்றவைத்துப் பல்லிடுக்கில் கடித்துக் கொண்ட பழக்காரன், “இன்னாடா நடந்துச்சு? எதுக்கு அந்தக் கெய்வியைப் போட்டு இப்படிச் சாத்துரே?” என்று புன்முறுவலுடன் கேட்டான்.

“ஐயோ, சாமி! அந்த அக்குருமையா கேக்கிறே?” என்று இரு கையையும் நீட்டிச் சொல்லிக்கொண்டே வந்த திண்டிகோடா, பழக்காரனின் எதிரில் டப்யெனக் குந்தித் தலையைத் தாங்கிப் பிடித்துக்கொண்டான்.

அவனுடைய நிலையைக் கண்ட பழக்காரனுக்கு உண்மையிலேயே பரிதாபமாகிவிட்டது. திண்டிகோடாவைப் பற்றி அவனுக்கு ஓரளவு தெரியும். மத்தியான வேளைகளில் பழ வியாபாரம் மந்தப்படும்போது, அந்த நரிக்குறவனிடம் தமாஷாகப் பேசிக் கொண்டிருப்பதில் அவனுக்கோர் அலாதிப் பிரியம். அதனால் அவனை பற்றிய சில விவரங்களைத் தெரிந்து வைத்துக் கொண்டிருந்தான்.

அந்த நரிக்குறக் குடும்பம், இந்த லெவல் கிராஸிங் அருகிலுள்ள மைதானத்தில் ‘டேரா’ போட்டுக்கொண்டு வந்து