பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

சோலை சுந்தரபெருமாள்


முய்க்கமாட்டோம் சாமி! தப்பித்தவறி அவளைமட்டும் நான் பார்த்துட்டா... கவ்தாரி கயித்தை முறிக்கிறாப்பலே முறிச்சுப் போட்டுட மாட்டேனோ!” என்று முரட்டுத்தனமாகக் கர்ஜித்தான்.

“இன்னா, பயக்கார! இங்கே கெராக்கி வந்து வந்து போவுது; நீ என்னமோ அந்தக் கொறவன்கிட்டே கோர்ட்டு கச்சேரி நடத்திகினு இருக்கிறியே!” என்று பூக்கடைக்காரியொருத்தி குரல் கொடுக்கவே, பழக்காரன் சட்டென்று திரும்பி, “சரிடா, அப்பறமா வந்து நாயம் சொல்றேன்; அந்தக் கெய்வியைப் போட்டு அடிக்காதே!” என்று சொல்லிக்கொண்டே தன் வியாபாரத்தைக் கவனிக்க விரைந்தான்.

திண்டிகோடா மெளனமாக உட்கார்ந்திருந்தான். ஆனால், அவனுடைய மனத்தின் வேக்காட்டை முகம் பிரதிபலித்துக் காட்டிக் கொண்டிருந்தது. சற்று நேரங்கழித்து எதையோ நினைத்துக் கொண்டவன் போல் தன் இடுப்பில் தொங்கிய ஒரு மடக்குக் கத்தியை எடுத்து நீக்கித் தனது இடது கை புஜத்தில், பின்னலிட்ட இரட்டைப் பாம்பு போன்ற சித்திரமாகக் குத்திக் கொண்டிருந்த பச்சைக் குறியைச் சதையோடு சீவியெறிந்தான். அது அவனுக்கும் வண்டிகோடிக்கும் கல்யாணம் நடந்தபோது குத்திய சடங்குப் பச்சை! அதைச் சீவியெறிந்த இடத்தில் இரத்தம் வழிந்தது. பொடிமண்ணை வாரி அந்தக் குருதிக்காயத்தில் அப்பிக்கொண்டு விருட்டென்று எழுந்து போய் , சிதறிக் கிடந்த சாமான்களையெல்லாம் ஒன்று சேர்த்து ஒரு பெரிய கோணிப்பையில் போட்டுக் கட்டுவதில் முனைந்தான்.

அவித்த மரவள்ளிக் கிழங்கைக் கடித்துத் தின்று. கொண்டே அங்கு ஓடி வந்தான் சிறுவன் மயிலங்கோடா. அவனிடம் திண்டிகோடா எதோ சொன்னான். பையன் அதைக் கேட்டு முரண்டு செய்வது போல் தலையசைத்தான். பாய்ந்து வந்த திண்டிகோடா அவன் கன்னத்தில் பளிரென ஓர் அறைவிட்டான். துடித்துப் பதறிய பையன் அழுதுகொண்டேபோய் கூடாரத் துணியைச் சுற்றிக் கட்டினான்.

அரைமணி நேரத்தில் ‘டேரா’ தூக்கியாகிவிட்டது. திண்டிகோடா ஒரு பையைத் தோளில் மாட்டிக்கொண்டு,! கட்கத்தில் வலைப்படலும், கையில் கவுதாரிக் கூண்டுமாகக் கிளம்பினான். பையனும், கிழவியும் மற்ற சாமான்களைத் தூக்கிக் கொண்டு, மெளனமாக அவனைப் பின் தொடர்ந்தனர். வியாபார மும்முரத்திலிருந்த பழக்காரன் அவர்களைக் கவனிக்கவில்லை.

சற்றுதூரம் சென்ற திண்டிகோடா சட்டென்று நின்று வானத்தை அண்ணாந்து பார்த்து, “ஏ-ஹே, சங்கிலி கொட்டா” என்று உரக்கக் கூவிக்கொண்டே ஒருபிடி மண்ணை வாரிக் காற்றில்