பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

146


வீசிவிட்டுத் தள்ளாடித் தள்ளாடி மேலே நடக்கலானான்.

வழக்கம்போல் அந்த லெவல்கிராஸிங் கதவுகள் சாத்திக் கிடந்தன. சாலையில் இருமுனை திசைகளிலும் வழக்கம்போல ஜனத்திரள் தேங்கிக் கிடந்தது. வாகனாதிகளும் வரிசை கூட்டி நின்று கொண்டிருந்தன. வெறுப்பும் வேதனையுமாக முனு முணுத்தவாறு சிவப்பு விளக்கின் எதிரில் போய் நின்றான் திண்டிகோடா. அவன் பின்னால் பையனும், கிழவியும் வந்து நின்றனர். பையன் மயிலங்கோடா அங்கு நின்ற கார்களையெல்லாம் ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

எதிரும்புதிருமாக இரண்டு ரயில்வண்டிகள் ஓடிமறைந்த பின், சாத்திக்கிடந்த கதவுகள் திறக்கப்பட்டன. ஜனங்கள் சாடி மோதிக்கொண்டு சாய்ந்து நகர்ந்தனர். கூட்டம் கலையும்வரை தயங்கி நின்ற திண்டிகோடா ஒரு பெருமூச்சு விட்டபடி சாலையில் இறங்கி நடந்தான்.

பின்னால் வந்த சிறுவன் மயிலங்கோடா திடீரென உரத்த குரலில், “ஏ, திண்டிகோடா! இத்ரே, கார்பண்டிலே, வண்டிகோடி போய்ரே, போய்ரே” என்று கூவிக்கொண்டே, எதிரே மெள்ள வந்து கொண்டிருந்த நீலநிறக் காரைச் சுட்டிக் காட்டினான.

இதைக்கேட்டு அடங்காச் சினமுற்ற திண்டிகோடா, சடாரென்று குனிந்து, அந்தக் காரினுள் தன் அனல் பார்வையை வீசினான். மறுகணம், தேள் கொட்டியவன்போல் துடித்துப் பின்னால் சரிந்து, கண்களை நிமிண்டிக் கொண்டு பரபரப்புடன் விழித்து நோக்கினான்.

அங்கே, அந்தப் பெரிய காரினுள், ஓர் நரிக்குறத்தி ஒயிலாகச் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள். ஆனால், அவள் உண்மையான நரிக்குறத்தி அல்ல; நரிக்குறத்திபோல் ‘மேக்-அப்’ செய்து கொண்டிருந்த ஒரு சினிமா நட்சத்திர நடிகை அவள்! மத்தியான ஷூட்டிங் முடிந்து, சிற்றுண்டிக்காகத் தன் வீட்டிற்குச் சென்றவள், இப்போது மீண்டும் படப்பிடிப்பிற்காக ஸ்டுடியோவுக்குப் போகிறாள் போலும்! “டோய்! நளினாதேவி போறாடா, நளினாதேவி!” என்ற குரல்கள் ஜனக் கும்பலிடையே இருந்து எழுந்தன. அடுத்த கணம் அந்த கார் குபீரெனக் கிளம்பி, சற்றைக்கெல்லாம் மறைந்தே போய்விட்டது.

பிரமை பிடித்தவன்போல் விக்கித்து நின்றான் திண்டிகோடா. அதே சமயம், சாலையின் எதிர்த் திசையிலிருந்து, “ஏ.. பச்சைமணி, பாசிமணி, கருகமணி, ராஜாத்திமணி வாங்கலியோ ஆயே!” என்று ஓசையாகக் கூவிக்கொண்டே வெயிலில் வாடிச் சோர்ந்து வந்து கொண்டிருந்தாள் நரிக்குறத்தி வண்டிகோடி.