பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

153


ஒரு கல்லை எறிந்தான். ‘ப்ளக்’ என்று ஒரு ரசிக்கும் படியான ஓசை கேட்டது. தூரத்தில் பம்ப்செட்டின் மேலே இருந்த விளக்கின் ஒளி தண்ணீரில் சிதறுவதைப் பார்க்க முடிந்தது.

அம்மா இருந்தா சொல்லுவா. தவளை இருக்கும். அடிக்காதடா! இப்ப அவ இல்லை. மறுபடியும் ஒரு கல்லை விட்டெறிந்தான். அவள் இருந்த வரைக்கும் கஷ்டப்பட்டாள். கஷ்டம் மட்டுமே பட்டாள். அவள் ரொம்பவும் எதிர்பார்த்த அண்ணன்கூட யாரையோ கல்யாணம் பண்ணிட்டு கல்கத்தா பக்கம் போய்விட்டான். அதன் பிறகு, ஊரில் இருந்த அம்மாவுக்கு அவன்தான் பணம் அனுப்பிக் கொண்டிருந்தான். அம்மாவுக்கு ஒரு ரேடியோ வாங்கணும்னு ரொம்ப நாளாய் ஆசை. கதா காலஷேபம் கேட்கணுமாம். அவனால் கடைசிவரை அதை வாங்கவே முடியவில்லை.

கணேசன் பட்டணத்தில் தான் குடியிருந்த ராயர் வீட்டை நினைத்துக் கொண்டான். அந்த வீட்டின் முன் பக்க அறையில் பத்து ரூபாய் வாடகைக்குக் குடியிருந்தான். ராயருக்குப் பெண்கள் இல்லை. தான் படிக்கும் கதைகளில், முன்பக்க அறையைத் தன் போன்ற பையன்களுக்கு வாடகைக்கு விடும் ராயர்களுக்கு மட்டும் எப்படி அழகான பெண்கள் இருக்கிறார்கள் என்று அவன் சந்தேகப்பட்டிருக்கிறான்.

ராயர் ரொம்பவும் நல்லவர். அவர் மனைவி ஒரு பதினைந்து வருஷப் படுக்கை நோயாளி. மனைவிக்கு மருந்து வாங்குவதிலேயே வாழ்க்கையை அழித்துக் கொண்டவர். கணேசனும் இந்த மருந்துகள் வாங்கும் விஷயத்தில் அவருக்கு உதவியிருக்கிறான். ஆனால் எந்த மருந்தும் அவளைக் குணப்படுத்தவில்லை.

ராயர் அவனை வேறு வேலை கிடைக்கும் வரை அங்கேயே இருக்கச் சொன்னார். ஆபீஸில் மேலே இருப்பவனை முறைத்துக் கொண்டதன் விளைவு... தன் சுயமரியாதையைக் காப்பாற்ற வேலையை ராஜினாமா செய்தான். (ம்...என்ன பெரிய சுயமரியாதை சாப்பாட்டுக்கு வழியில்லாம!) சாப்பாட்டைப் பற்றி அவர் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லியும் மறுத்துவிட்டான். தன் மேல் பிறர் அனுதாபப்படுவதை மிகவும் வெறுத்தான். (ஆமா, இதுக்கு மட்டும் கொறைச்சல் இல்லை)

வேறு வேலை இங்கே இனிமேல் கிடைக்காது. ஆறு மாதம்வரை இருந்து ‘செட்டில்மென்ட்’ பணத்தை வைத்து ஓட்டியாயிற்று. எங்க போனாலும் Experience இருக்கா?ன்னு கேக்கறான். இருக்குன்னு சொன்னா அந்த வேலையை ஏன் விட்டேன்னு கேக்கறான்.

வேலை நிச்சயமாய்க் கிடைக்காது என்று தெரிந்தவுடன் முன்பு வேலை பார்த்துக் கொண்டிருந்த தன் ஒன்றுவிட்ட மாமாவின்