பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

சோலை சுந்தரபெருமாள்


ஊரில் இருக்கும் ‘மில்’லுக்குப் போவதுதான் கடைசி வழி என்று தீர்மானித்துத் தன் மூன்று வருடப் பட்டண வாழ்க்கையை எக்மோர் ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் உதறிவிட்டு ரயில் ஏறினான்.

கூட்டம் என்ஜின் பக்கம் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு பெட்டியிலும் உட்கார்ந்திருந்தவர்கள் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார்கள். அந்தப் பெண்ணும் ஜன்னல் வழியே தனியாய் நின்று சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கும் கணேசனையே பார்த்துக் கொண்டு இருந்தாள். கணேசனுக்குத் திடீரென்று ராயர் வீட்டுக்கு நாலு வீடு தள்ளி இருந்த மாடி வீட்டு மைதிலியின் ஞாபகம் வந்தது. அவன் அவளை ரொம்பவும் விரும்பினான். இவள்தான் நம் மனைவி என்று தீர்மானமாய்க் காதலித்தான்.

‘யாரோ அடிபட்டுக் கிடக்கான்’

‘அவனைத் தேடவே இவ்வளவு நேரம் ஆயிடுச்சு’

‘செமுத்தியான அடி. உடம்பு பூரா அடி!... ஒரே ரத்தம்”

மைதிலி மிக அழகாய்ச் சிரிப்பாள். அவள் சிரிப்பு ஒண்ணுதான் அவள் சொத்து. அந்தச் சிரிப்புக்காக அவன் பஸ் ஸ்டாண்டில் தினமும் காத்துக் கொண்டிருப்பான். கூட்டம் கொஞ்சம் பரபரப்பாய் பேச ஆரம்பித்தது. சிலர் என்ஜின் பக்கம் போய் அதைப் பார்த்துவிட்டு வர ஓடினார்கள்.

‘உசிரு இருக்கா?’

‘தெரியல. பக்கத்து ஜங்ஷன்ல இருக்கற ஆஸ்பத்திரிக்கு எடுத்துண்டு போவாங்கன்னு நெனக்கறேன்.’

இருட்டுல ஒரு எளவும் தெரியல. மைதிலி போல ஒரு பெண் இனி உலகத்தில் தனக்குக் கிடைக்கமாட்டாள் என்று அவன் நினைத்தான். மைதிலியோடு பேச அவன் பலமுறை முயன்று தோற்றுப் போனான். அது தன்னால் முடியாது என்றும் முடிவு செய்தான். ஆனால் அவளோ இவனை பார்த்ததும் ஒரு லேசான புன்னகையைக் காண்பித்துவிட்டு உடனே முகத்தைத் திருப்பிக் கொள்வாள். இது போதும் என்று அவன் நினைத்தான்.

‘உசிரு இருக்காது. அந்தக் கார்டுகூட நாடி பாத்துட்டு ஒதட்டைப் பிதுக்கிட்டாரே.’

‘அப்படியே இருந்தாலும் இவுக போறதுக்குள்ளே போயிடாதா?’

‘எப்படி உளுந்தானாம்?’

ஆனால் அவள் தன்னைக் காதலிக்கிறாளா என்பதை மட்டும் அவனால் அறியவே முடியவில்லை. தன்னுடைய அந்தப் பேடித்தனத்தை எண்ணி அவன் குமுறினான். ஏன் அப்படி இருந்தோம்? ஏன்? என்று பலமுறை தன்னையே கேட்டுக் கொண்டான். பற்களைக் கடித்துக் கொண்டான். மறுபடியும் ஒரு