பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

155


சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு மணியைப் பார்த்தான். 11.30.

‘அந்த ஆளு லயனை க்ராஸ் பண்ணறச்சே வண்டி வரதைப் பார்க்கல் போல. இங்க லயன் வேற வளஞ்சில்ல வருது!’

‘டிரைவர்கூட கொஞ்சம் முன்னாலதான் பார்த்தாராம்.’

‘பாவிப் பசங்க ஏன் இப்படி நம்ம உயிரை எடுக்கிறானுவளோ தெரியலை.’

கடைசியில் அவனால் அவளை அடைய முடியாமலேயே பேயிற்று. வேறு யாரோ ஒரு கணேசனுடன் அவளுக்குக் கல்யாணம் நடந்தது. அவன் ஒரு இன்ஜினியர் என்று கேள்விப்பட்டு அவன் மைதிலிக்காக வருத்தப்பட்டான். கல்யாணம் வெகு ஆடம்பரமாய் நடந்தது. இவன் ராயர் வீட்டு மொட்டை மாடியில் நின்று கொண்டுதான் அந்த மாப்பிள்ளை ஊர்வலத்தைப் பார்த்தான். கண்ணில் தளும்பி நின்ற நீரைக் கஷ்டப்பட்டுத் தேக்கிக் கொண்டான். அழக்கூடாது, அழக்கூடாது என்று தீர்மானமாய்ப் பல்லைக் கடித்துக் கொண்டு நின்றான்.

‘பாடியை என்ன பண்ணுவாங்க?’

‘போஸ்ட் மார்ட்டம் பண்ணிட்டுத்தான் குடுப்பாங்க, லயன்ல விழறதுக்கு முன்னாடியே அவன் செத்துப் போயிட்டானா இல்லையான்னு கண்டுபிடிப்பாங்க.’

‘நாளை பேப்பர்ல இந்த நியூஸ் வருமா?’

‘ம்...கண்டிப்பாய் வரும். கொட்டை எழுத்தில் நாலு காலத்துல போடுவான்.’

‘பாவம். சாகறதுக்கு முன்னாலே என்ன நெனச்சுக்கிட்டானோ. இருவத்தஞ்சு வயசு ஆள் மாதிரிதான் தெரியுது. கல்யாணம் ஆயிடுச்சோ என்னமோ!’

இதற்குள் கார்டின் விஸில் சத்தம் கேட்டது. எல்லோரும் விழுந்தடித்துக்கொண்டு தங்கள் பெட்டிகளை நோக்கி ஓடினார்கள். என்ஜினின் ஹாரன் ஓசை ஒரு முறை நீளமாய் அலறியது. கதவு வழியில் அதிகக் கூட்டம் இருந்ததால் சிலர் ஜன்னல் வழியே தங்களைத் திணித்துக் கொண்டார்கள்.

ஒரு வழியாய் எல்லோரும் ஏறிய பின் ரயில் மெதுவாய் நகர்ந்தது. கணேசன் மட்டும் கீழேயே நின்று கொண்டிருந்தான். ரயில் வேகமாய் நகர ஆரம்பித்தபோது இன்னும் சிலர் கதவு வழியில் உள்ள கைப்பிடியில தொங்கிக் கொண்டிருந்தார்கள். ரயில் முழு வேகத்தில் அவனைக் கடந்து போயிற்று. அவன் கடைசிப் பெட்டியின் பின்னால் தெரியும் சிவப்பு விளக்கு மறையும்வரை பார்த்திருந்துவிட்டு இன்னொரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான்.