பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

சோலை சுந்தரபெருமாள்


பயப்படவில்லையாம். நாய்களையெல்லாம் அது பலபடித் துன்புறுத்திற்று. நாய்க்குட்டிகளைக் கொன்று போடுகிறதாம். ‘ஒற்றைக் குரங்கு ஊரை அழிக்கும்’ என்பது ஹனுமானைப் பற்றிய பழமொழியாம். அவர் லங்கையை அப்படி அழித்ததால்தான், நம்முடைய தெய்வமானார். ஆனால் இந்த குரங்கு எங்கள் ஊரில் இப்படி அட்டுழியம் செய்து வருகிறது. ஊரில் எல்லோரும் புராதனக் குடிகள். உலகத்தின் அணுவணுவிலும் தெய்வத்தைக் கண்டு போற்றும் புராதனக் கொள்கைகளை உடையவர்களின் வம்சபரம்பரை. ஆகவேதான் அந்தக் குரங்கைப் பிடிக்கவோ, அடிக்கவோ, அன்றிச் சுடவோ அவர்கள் அனுமதிப்பதே இல்லை. “நாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டுமே ஒழிய ஆஞ்சநேய ஸ்வாமிக்கு அபசாரம் செய்யலாமோ” என்கிறார்கள். இப்படியெல்லாம் விவரங்கள் தெரிந்தன.

ராமு கடன்பட்டுப் புண்பட்டதற்கும் இந்த வானர லீலைக்கும் என்ன சம்பந்தம்? இது யாரும் சொல்லவில்லை. எனக்கும் புரியவில்லை.

“ராமு சில சமயமாவது நல்லபடி ஒழுங்காய்த் தொடர்ச்சியாய் பேசுகிறான் அல்லவா?” என்றேன்.

“அதெல்லாம் ஒன்றும் குறைவில்லை. குரங்கைக் கண்டுவிட்டால் இந்தப் பிரமை வந்து விடுகிறது. அதிசயம்தான் இது...” என்றனர்.

‘பாவம். ராமு. அவனை எப்படியாவது என்னுடன் வடக்கே அழைத்துக்கொண்டு போய் ஒரு உத்தியோகம் தேடிக் கொடுத்துவிடவேண்டும். அப்புறம் இந்த ஊரையே மறந்துவிடட்டுமே அவன்’ என்று தீர்மானித்துக் கொண்டேன்.

நானே போய் ராமுவை அழைத்து வந்தேன். பார்வையில் பைத்தியத்தின் கோணல் இருக்கிறதா என்று ஆராய்ந்தேன். சற்றும் இல்லை. நடை, உடை, தோற்றம் எதிலும் கோளாறு இல்லை; ஆனால், அவன் மனதில் ஒரே விதமான போக்கு, ஒன்றை பற்றியே ஒரே எண்ணம் தொடர்ந்து இருப்பதுபோல் இருந்தது அவன் பாவனை. இதை யூகித்தேன். அதாவது அவன் மனம் அதிர்ச்சியில் அயர்ந்து குறிப்பிட்ட ஒரே துடிப்பை மட்டும் தொடர்ந்து துடித்துக் கொண்டிருக்கவேண்டும் என்ற தோன்றிற்று.

அவன் போக்கிலேயே ஆரம்பித்தேன் பேச்சை; “ஏண்டா ராமு, இப்ப எப்படி இருக்கு குரங்கு? ஆமாம். பிராணி விஞ்ஞானத்தில் எப்போதிருந்து உனக்கு இவ்வளவு ஈடுபாடு?”

“அந்த ஒரு விஞ்ஞானம் மட்டும் அல்ல; இன்னும் பல விஞ்ஞானங்களும் இதில் தெரிகின்றன...”