பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

165


அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு வீடு திரும்பினான். பூமாலையையும், செண்டையும் எடுத்து வரும் சுமைதாங்கிச் சிறுவன் ஒருவன் பின்னால் வந்தான்.

அவனுடைய கால்கள் பூமி மீது பாவவில்லை என்றே கூறவேண்டும். பேனா பிடித்தவனுக்கு வாய் ஊமை என்பதைப் பொய்ப்பித்துவிட்டோம். என்கிற மகிழ்ச்சி மிகவும் அழகான மொழியில் உயர்ந்த ஓர் உண்மையை வெகு லாகவமாக வெளியிட்டுவிட்டோம் என்கிற பெருமிதம் கூட.

“பூ மத்திய ரேகை” என்று மனத்துக்குள் முணு முணுத்தான். “நான் என்னும் உணர்ச்சி” அது ஓரளவு தேவைதான். ஆனால் “நான்” தான் நித்யம் என்பது தான் சமுதாயத்துக்குச் சாபம்.

வீட்டு வாயிலில் கால்கள் நின்றபோதுதான் அவனுக்குத் தன் நினைவு வந்தது. தாழிடாமல் சாத்திருந்த கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றான். வீட்டு முன் கூட்டில் வெளிச்சம் இல்லாததால் அவன் விளக்கைப் போட்டான்.

“ராஜம்”

பதில் வரவில்லை. பிறகுதான் பூமத்திய ரேகையிலிருந்து அவன் வீட்டுக்கு வந்தான். பூமாலை கழுத்தில் விழுந்த விஷயம் ராஜத்துக்கு மகிழ்ச்சி அளிக்குமோ என்னும் எண்ணம் ஓர் அற்ப வினாடி அவனுள் எழுந்தது. அவன்தான் அப்படி நினைக்கும் வழக்கம் இல்லையே என்ற மறுநினைவு முதல் நினைவை விழுங்கியது.

“ராஜம்!” என்று மீண்டும் அழைத்துக் கொண்டே இரண்டாவது கட்டுக்குச் சென்றான். அங்கு இருந்த இருட்டை விலக்கினான்.

ராஜம் அங்கே இருந்தாள்; கிடந்தாள்; ஆடை அலங்கோலமாய்த் தலையைக் கவிழ்த்துக் கொண்டு.

“உடம்புக்கு என்ன ராஜம்?” என்று பதறி அங்கவஸ்திரத்தை அங்கேயே எறிந்துவிட்டு அவன் அருகில் வந்து உட்கார்ந்தான். என்னவோ?’ என்ற பயம் அவனுக்கு உண்டாகிவிட்டது.

“ஒன்றுமில்லை” என்றாள். அவள்.

“ஸார்!” என்றது சிறுவனின் குரல். வெளியே சென்று மாலையை வாங்கிக் கொண்டு, கதவைத் தாழிட்டான். மாலை மேஜையின் மீது விழுந்தது. அதை ராஜத்திடம் காட்டி, அதனால் தனக்குண்டான பெருமையைக் கூறவேண்டும் என்ற அவன் நினைப்பு கரைந்துவிட்டது. மனைவியின் பக்கம் அவன் சென்றான்.

“ராஜம்! ஜூரம் கிரம்...”

“ஒன்றும் இல்லை” என்ற பதில்தான்.