பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

சோலை சுந்தரபெருமாள்



தலையை, உடம்பைத் தொட்டுப் பார்த்தான். சாதாரணமாகவே இருந்தது. கொஞ்சம் ஆறுதல் உண்டாயிற்று.

“நான் சாப்பிட...”

“நான் சமைக்கவில்லை” என்றாள். மிகவும் மெதுவாய்...

“ஏன்?”

“இல்லை”

“முன்பே சொல்லியிருந்தால் அந்தப் பையனையாவது ஹோட்டலுக்கு அனுப்பி ஏதாவது வாங்கிக் கொண்டு வந்திருக்கலாமே?”

அவள் பேசவில்லை.

“சரி, நான் போய் இரண்டு பேருக்கும் ஏதாவது வாங்கி வருகிறேன்” என்று அவன் கிளம்பினான்.

ஹோட்டலுக்குப் போகும் போதும், திரும்பும்போதும் கூட அவனுக்கு அந்தக் கரகோஷம்தான் ஞாபகம். வீட்டைவிட அவனுக்குப் பூமத்தியரேகை இதமாக இருந்தது. அறிவாளிகள் அநாவசியமாய்க் கை தட்டுவார்களா? தங்களையும், நாகரிகத்தையும் மறந்து அவர்கள் செய்தால் அது அவனுக்கு விசேஷ கெளரவம் அல்லவா?

ஆம்; ஆனால் அவனுக்குக் கிடைத்த இந்தப் பெருமையை, பெருமையின் மகிழ்ச்சியை அவளும் தன்னுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினான். ஆனால் என்றுமே அவள் அப்படி இருந்ததில்லையே. இன்று மாத்திரம் எதிர்பார்ப்பது தவறு என்ற நினைவு ஒரு பெருமூச்சை அவனிடமிருந்து பறித்தது.

இரவு பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டதால், ஹோட்டலில் சாப்பாடு கிடைக்கவில்லை. மாலை டிபனில் மீந்திருந்ததைக் கட்டிக் கொண்டு அவன் வீட்டுக்குத் திரும்பினான்.

“ராஜம்! எழுந்திரு சாப்பிட்டுவிட்டுப் படுக்கலாம்.”

“நீங்கள் சாப்பிடுங்கள்.”

“சாப்பாடு கிடைக்கவில்லை; டியன்தான்.” என்று கூறிச் சாப்பிட்டு முடித்தான் விரைவாய்.

“நீயும் சாப்பிட்டால் தூங்கலாமே?”

“நீங்கள் போய்த் தூங்குங்கள், கொஞ்சநேரம் ஆகட்டும், பார்க்கிறேன்.”

இம்மாதிரிச் சந்தர்ப்பங்களில் அவளுடன் அதிகம் பேசக்கூடாது. முன்கட்டுக்குச் சென்று படுக்கையை விரித்து உடலைச் சாய்த்தான்.

மனம் நிலைகொள்ளவில்லை. பூமத்திய ரேகைக்குப் பாய்ந்தது; பின் தன் பெருமைக்கு நகர்ந்தது. அங்கிருந்து தன் குடும்ப வாழ்க்கையின் அசாந்தியில் அமுக்கியது.

வழக்கமாய்ச் சொல்வதுண்டு. பெண் ஒரு புதிர் என்று.