பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

சோலை சுந்தரபெருமாள்


கொண்டாளே தவிர, அவனுடைய இச்சைகளைப் புறக்கணிப்பதில் மிகவும் தீவிரமாக இருந்தாள். சின்னஞ்சிறு காரியத்திலும் அப்படித்தான். குடும்ப வாழ்க்கைக்கு ருசி அளிக்கும் விஷயம், உணவு. அதுகூட அவன் நினைத்தால்தான் உண்டு. இல்லாவிட்டால் தடிப் பிரம்மச்சாரியைப் போல் ஹோட்டலில்தான் வயிற்றைக் கழுவவேண்டும்.

அவன் துடித்துக்கொண்டே படுக்கையிலிருந்து எழுந்தான்.

“அவள் குழந்தை. இன்னும் பொறுப்பு உணரவில்லை; அதனால்தான் இப்படி...”

அவளுக்காக ஒரு சமாதானம் கூறிக்கொண்டு ஜன்னலுக்குப் பக்கத்தில் சென்று நின்று, வெளியே இரவைப் பார்த்தான்.

இரவு ஒய்யாரமாய் உறங்கியது. வானப் பொய்கையில் மிதக்கும் நிலவு ஒளிக் கொப்புளம் விட்டுக் கொண்டே நீந்தியது. ஆங்காங்கு நுரை முகில்கள்.

கண்ணுக்கு எட்டும் தூரம் வரையில், இந்த அழகான இரவில் கவலையோ, வேதனையோ இல்லை என்று கூற முடியுமா? ஆனால் இரவும் வானும் எல்லாவற்றையும் போர்த்துவிட்டன. ஆகையால் எங்கே பார்த்தாலும் அமைதி. ஒரே அமைதியாகத் தென்படுகிறது. அந்த அழகான அமைதியில் ஈடுபடுகிறவர்களின் மனத்துக்கும் அமைதி அளிக்கிறது.

அமைதியாக அவன் நெடுநேரம் நின்றான்; இயற்கை அமைதியைத்தான் அளிக்கிறது. ஆனால் மனிதன் தன் மன விகாரங்களினாலும், உடலின் வசதிக் குறைவினாலும், செயற்கையினாலும் இயற்கையைக் குழப்பிச் சேறாக்கிவிடுகிறான். அமைதியாகச் சிந்தித்துக் கொண்டே மனைவியை நாடிச் சென்றான், மீண்டும்.

அங்கு விளக்கு முன்போலவே எரிந்துகொண்டிருந்தது. ராஜம் அங்கேயே பழைய இடத்திலேயே முடங்கிக் கிடந்தாள். தூக்கம் வந்திருக்கும் எனத் தோன்றியது. அவன் கொண்டு வந்த டிபனும் வைத்தது வைத்தபடியே இருந்தது.

“ராஜம்!”

அவனைத் தொட்டு எழுப்பினான்.

“சாப்பிடவில்லையா நீ?”

“எனக்குப் பசி இல்லை.”

“முதலிலேயே சொல்லி இருந்தால்...”

“சொல்லவில்லை”

“விளக்கை அணைத்துவிட்டாவது தூங்கக்கூடாதா?”

“அணைக்கவில்லை.”