பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

169



பரீட்சையில் இந்தக் காலத்தின் கேட்கிறார்களே, துணுக்குக் கேள்வி துணுக்கு விடை என்று அது மாதிரி கேள்வியும் பதிலும், பரீட்சைக்காரனுக்குத் திருப்தி அளிக்கலாம், வாழ்க்கையில்?

நிலை பிசகும் அமைதியுடன் சிறிது நேரம் பேசாது இருந்தாள். அவள் அவிழ்த்து வைத்திருந்த ஜரிகைப் புடவையின்மீது அப்போதுதான் அவன் கவனம் சென்றது.

அவ்விருவருக்கும் மணம் ஆன காலத்தில் வாங்கியது அது. முழு ஐரிகைப் புடவை; கட்டிக் கொண்டால் தங்கத் தகடுபோல் ஜ்வலிக்கும். ஆனால் அதை உடுக்கிறவள் பழங் காலத்துத் திடப்பெண் ணாக இருக்கவேண்டும். எருமைபோல் கனப்பதோடு உடலையும் கீறிவிடும். அதை உடுக்கவேண்டாம் என்று பல முறைகள் கூறியிருக்கிறான். அவளால் அவ்வளவு பாரம் சுமக்க முடியாது.

ஆனால் அதை உடுத்திக் கெளரவம் பெறுவதற்காக எங்கோ வெளியில் போயிருக்கிறாள். யாராவது சிநேகிதி வீட்டில் விசேஷமாக இருக்கலாம்; போன இடத்தில் அவளுடைய மனம் புண்படும்படி ஏதாவது நடந்திருக்கலாம். ஆகையால் சோர்ந்து படுத்துவிட்டால் போலும்! சோகத்திலும் சோபை அவனைக் கவர்த்தது.

“ராஜம்! நான் வெளியில் போன சமயம் நீ வெளியே போனாயா?”

“ஆமாம், ராதையின் குழந்தைக்கு நாமகரணம்!”

“இந்தப் புடவையையா கட்டிக்கொண்டு போனாய்? ஜரிகை உடம்பெல்லாம் கீறி இருக்குமே?”

“கிறினால் என்ன?”

“கீறினால் என்னவா?...உம் அங்கே என்ன நடந்தது?”

“நாமகரணம்”

“அதைக் கேட்கவில்லை. நீ இப்படி முகம் சுண்டிப் படுத்திருக்கிறாயே, உன் மனசுக்கு வருத்தம் உண்டாகும்படி...

“ஒன்றும் இல்லை.”

“என்னிடம் சொல்லக்கூடாதா?

“என்ன சொல்ல?”

“இத்தனை நாட்கள் என்னுடன் பழகியும் நீ என்னைப் புரிந்து கொள்ளவில்லையா ராஜம்? என்னிடம் உன் குறையைச் சொல்லக்கூடாதா?”

“எனக்குத் தூக்கம் வருகிறது.”

“என்னை இன்னும் அன்னியன் என்றுதான் நினைக்கிறாயா ராஜம்”-

அவன் பொறுமையுடன் மாத்திரம் பேசவில்லை. குழைந்து குழைந்து பேசினான், தோல்வியுற்றவன் போல்.