பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அவள் நெஞ்சம்

றையிடப்பட்டு மூலையிலே சாத்தி வைக்கப்பட்டிருந்த நாதஸ்வரத்தை எடுத்து வைத்துக்கொண்டு கூடத் தில் உட்கார்ந்தான் முத்துத் தாண்டவன். பையை அவிழ்த்து, ‘ஆச்சா’ மரத்தால் ஆகிய அந்த நாதஸ்வரத்தை எடுத்து, கெண்டை வேறு ‘அணைசு’ வேறாகப் பிரித்துப் போட்டுத் துடைக்க ஆரம்பித்தான். பதமாக வேக வைக்கப்பட்ட இரண்டங்குல நீளக் கொறுக்குத் தட்டையைக் கிட்டிப் பலகையில் கொடுத்து நன்றாக இறுக்கி அதன் அடிப்பாகத்தை நூலால் அழுத்தச் சுற்றி, அவ்வாறு செய்து முடித்த ‘சீவாளி’யை நாயனத்தின் வாயில் பொருத்தினான். சரிசெய்து முடித்த அந்தப் பாரி நாயனத்தைக் கையில் எடுத்துக் கேதார கெளளை ராகத்தை ஆலாபனம் செய்யத் தொடங்கினான். இரண்டு கட்டைச் சுருதியில் அவன் குரல் விட்டுவிட்டு இழைந்தது. பாடிக்கொண்டிருந்த அவன் சட்டென நிறுத்திவிட்டுத் தெருப்பக்கம் எட்டிப்பார்த்தான்.

வீதி நிறையத் திருவிழாக் கூட்டம் ‘திமுதிமு’ என்று சென்று கொண்டிருந்தது. எங்குப் பார்த்தாலும் கியாஸ் லைட் ஒளி கண்னைப் பறித்தது. சுற்றுப்பட்ட கிராமங்களிலிருந்து கையில் கட்டுச்சோறு மூட்டைகளோடு அன்றைய நிகழ்ச்சியாகிய புஷ்பப் பல்லக்கைக் காண மக்கள் வந்து திரண்டார்கள். அன்றைக்கு இரவு முத்துச் தாண்டவனின் நாயனக் கச்சேரியும், திருவாரூர் அலங்காரத்தின் சதிர்க்கச்சேரியும் நடக்கவிருக்கிறது என்றால் கூட்டத்திற்குக் கேட்கவா வேண்டும்? அலைமோதும் ஜனக்கூட்டத்தைப் பார்த்ததும், அந்த ஊரில் கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கும் சற்குணநாத ஸ்வாமியின் மகிமைக்காக மட்டும் அல்லாமல் தன்னுடைய இசைவிருந்தைக் கேட்பதற்காகவுமே அத்தனை கூட்டம் வந்திருப்பதாக எண்ணி முத்துத்தாண்டவனின் மனம் விம்மியது. அதில் ஓரளவு உண்மையும் இல்லாமல் இல்லை.

தான் வாசித்துக் கொண்டிருப்பது போலவும், எதிரே அலங்காரம் பதம் பெயர்த்து ஆடுவது போலவும் ஒரு மானசீகமான கற்பனை அவன் மனத்தில் படர்ந்தது. அந்த