பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

சோலை சுந்தரபெருமாள்


பொஞ்சாதியாக நீ ஒருநாளும் இருக்க இயலாதாக்கும்! நான் வந்த தடத்திலே திரும்பிடறேன். மஞ்சிவிரட்டிலே எனக்கு கெலிப்பு என்னோட முரட்டுத் தனத்துக்குக் கிடைச்சிட்ட கெலிப்பாகவே இருந்துபுடட்டும்! ஆனா. அதே மஞ்சு விரட்டுல தோத்து போயிட்ட என் தம்பி முத்துலிங்கத்துக்கு என்னோட கெலிப்பை வெற்றியை தாரை வார்த்துக் கொடுத்துப்புடறேன். பாரத சண்டையிலே கர்ணமாராசரு யார்கிட்டேயா தருமத்தையோ எதையோ தாரவார்த்துக் கொடுக்கலையா, அது கணக்கிலே!

“அப்பாலே, தம்பி முத்துலிங்கம் மஞ்சுவிரட்டுப் பந்தயத்திலே கெலிச்சவனாக ஆயிடும். இல்லையா? ஓ... இந்த ஒரு நல்ல நினைப்பு இந்த முரடன் மனசிலே தோனுறதுக்குக் கூட, நீங்க ரெண்டுபேரும் மதிச்சுக்கிட்டு இருக்கிற அந்த தருமமான சத்தியமேதான் காரணமா இருக்குமோ? பவளம், ஒம் புண்ணியத்தாலே நானும் கூட ஒரு மனுஷனாக ஆகிப்பூட்டேன் போலத்தான் தோணுது! பலே பலே பவளம். நீ உம் மச்சானை உன் ஆசைப்படி புள்ளையாட்டாம் நெஞ்சிலே சாச்சிகிட்டு உன்னோட வண்டிக்கு ஓடியா. எந் தம்பியைப் பாத்தியா, பவளம்? எந்தம்பி எம்பேச்சுக்கு கட்டுப்பட்டு, என்னமாய் பெட்டிப் பாம்பாய் அடங்கிக் கிடக்கிறான் பாத்தியா செம்பளம்? ம்... உம்... அம்புட்டுதான்...! பூலோக ரம்பைக்குத் தெரியாத இனிநோக்காடு கூடுதலாகாதர்க்கும்! உம் அணைப்பு ஒன்னே போதும். அவனை மறுபிறப்பு எடுக்கச் செய்யுறதுக்கு. என் தம்பி கொடுத்து வைத்தவன் அதான் ஒன்னை எடுத்துகிட்டான். ஓங்க ரெண்டு போரோட சுத்தமான சொப்பனம் பலிச்சிருச்சு! ம். மெதுவா நட, நான் ஓடிப்போய் வண்டியைக் கட்டுறேன்! நான் கண்ட பாரத சண்டை பயாஸ்கோப்பிலே. கண்ண பரமாத் தேரை ஓட்டின சங்கதியை நான் எப்பவும் மறந்திட இயலாதாக்கும்!...”

முத்தையனின் இடப்புறக் கண்ணின் முனையிலிருந்து கண்ணீர் வெளிச்சத்திலே மின்னி பளிச்சிட்டு சிந்தி சிதறுகிறது!

செம்பவளம் விம்மியபடி கையெடுத்துக் கும்பிடுகிறாள்!

ஈட்டி முனை கொம்புகளில் காவிப்பூச்சு மின்ன, தலைநிமிர்ந்து நின்ற அந்த ஆலத்தாம்பாடிப் பூரணிச் செவலைக்கும் இப்போதுதான் போன உயிர் திரும்பியிருக்க வேண்டும்!...