பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தி.ச. ராஜூ

ஞ்சை மாவட்டம் தில்லை ஸ்தானத்தில் பிறந்த தி.சா.ராஜூ பட்டாளக்காரர், சிறந்த இலக்கியவாதி. அவரைப்பற்றி அவருக்குள்ளே தீவிர கொள்கையும், நம்பிக்கையும் கொண்டவர். அவரின் முதல் சிறுகதைத் தொகுப்பான பட்டாளிக்காரன் என்ற சிறுகதை நூலுக்கு அவர் எழுதிய முன்னுரையான சொந்தக்கதையே அவரைப்பற்றி வாசக உலகம் புரிந்துகொள்ள போதுமானதாக அமையும் என்று அதையே இங்கே முன் வைக்கிறேன்.

‘தீவிரமான நாட்டுப்பற்றும் இலக்கியப் புலமையும் உடைய பதிப்பாசிரியர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். சிறுகதை இலக்கியம் பற்றி அவருடன் உரையாடும்போது, “தமிழில் நல்ல சிறுகதைகள் வெளிவந்து கொண்டிருப்பது உண்மைதான். ஆனால் எந்த எழுத்தாளரும் ஒரு குறிப்பிட்ட துறையின் சிறப்பான முன்னேற்றம் காட்டக் காணோம். உதாரணமாக வேட்டைக்கதைகள் சிலவற்றைத் தொகுத்து வெளியிடலாம் என்று எண்ணினேன். வெளியிடுவதற்குத் தகுதியுள்ள பத்துச் சிறுகதைகள் கூட எனக்குக் கிடைக்கவில்லை.’ என்று அங்கலாய்த்தார்.

அவருடைய குறையீடு நியாயமானது என்று கூறத்தேவையில்லை. அறிஞர் வ.ரா. அவர்கள் கூறியது போல் ‘திரும்ப சகதி நிறைந்த சுவடு விழுந்த பாதையில் தான் நமது கற்பனை வண்டி சென்று கொண்டிருக்கிறது’ என்பது மறுக்க முடியாத உண்மை.

“அந்த உரையாடல் என்னை இந்தத் துறையில் செயல்புரிய ஊக்கியது. சென்ற இருபது ஆண்டுகளுக்கு மேல் இராணுவத்தில் செம்மையுற பணிபுரிந்த செயல் கர்வம், படையினரின் சஞ்சிகையில் அவர்களுக்காகவே உரக்கச்சிந்திக்கும் வகையில் வரைந்த கடிதம் கட்டுரைகள், வெளியிட்ட ஓரிரு நூல்கள் ஆகியவை. தமிழில் படைத்துறையினரைப் பற்றியும் சில கதைகள் எழுதும் துணிவைத் தந்தன.”