பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

199


வயசுக் காலத்தில் அவன் நல்ல புயபலமுடையவனாக இருதிருக்க வேண்டும். குழந்தை ரோஸி என் முகத்தைப் பார்த்தாள். அவளுடைய குறிப்பறிந்து கடலைக்காரனை என் வீட்டிற்கும் அழைத்தேன். அண்மையில் வந்தபோது அவனுடைய முதுமை இன்னும் தெளிவாக விளங்கிற்று. அவனுடைய கண் இமை ரோமங்களும், புருவங்களும் கூட நரைத்திருந்தன. என்றாலும் நடையிலே நடுக்கமில்லை. கண் பார்வை தீர்க்கமாக இருந்தது. குழந்தைக்கு வேர்க்கடலை வாங்கிக் கொடுத்துவிட்டு உள்ளே வந்தேன்.

பிறகு தினமும் இதே வழக்கமாகப் போய்விட்டது. அவனுடைய இசை பொருந்திய ஒலியைக் கேட்காவிட்டால் என்னவோபோல் இருந்தது. அவனுடைய பெயர் அந்தோணி என்று தெரிந்துகொண்டேன். நான் தவறாமல் அவன் எங்கள் விடுதியில் நிலக்கடலையும், பட்டாணியும் விற்க வந்தான். தினமும் குழந்தைகள் அவனுக்குக் கப்பம் கட்டி வந்தன. அவனுடைய வரவை ஆவலுடன் எதிர்பார்க்கத் தொடங்கின.

அன்று அவன் ஏனோ வரவில்லை. குழந்தை ரோஸி வீட்டு வாசலில் நெடுநேரம் அவனுக்காகக் காத்திருந்தாள். பிறகு உள்ளே வந்து, “அம்மா, இன்று அந்தோணித் தாத்தாவைக் காணோம்!” என்றாள். அவளுடைய குரலில் ஆதூரம் தொணித்தது. இந்தச் சில நாட்களில் குழந்தை அவனுடன் நெருங்கிப் பழகிவிட்டாள்.

“உடம்பு சரியில்லையோ என்னவோ! இல்லாவிட்டால் வராமல் இருக்கமாட்டானே! நான் அசிரத்தையாகப் பதிலிறுத்தேன். அது அவளுக்குத் திருப்தி அளிக்கவில்லை. தம்பி ஜேம்ஸை மடியில் வைத்துக் கொண்டு வாசல் வராந்தாவிலேயே உட்கார்ந்திருந்தாள். பகலுணவிற்காக என் கணவர் வந்தபோதும் அவள் உள்ளே வரவில்லை. அவர் உணவருந்தித் திரும்பிய பிறகு சற்று அசதியுடன் கண்ணயர்ந்தேன். ஏதோ சத்தம் கேட்டது. எழுந்துபார்த்த போது குழந்தைகள் ஜேம்ஸ், ரோஸி இருவரையும் காணவில்லை. திடுக்கிட்டவாறு விடுதியின் முன்புறம், பின்புறம் எங்கும் தேடினேன். சுற்றுச்சுவர் அருகில் ஆலமரத்தடியில் ஏதோ பேச்சுக் குரல் கேட்டது.

குழந்த ஜேம்ஸ் ஒரு மிட்டாயைச் சுவைத்துக் கொண்டிருந்தான். ரோஸி ஒரு பொம்மையை அணைத்தவாறு அந்தோணித் தாத்தாவின் மடியில் படுத்திருந்தாள். தாத்தா அவளுக்கு ஏதோ கதை சொன்னார். ரோஸி அதைக் கேட்டு மகிழ்ந்து கொண்டிருந்தாள். என்னைக் கண்டதும் பரபரத்தவாறு எழுந்திருக்க முயன்றார் அந்தோணி.