பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

19

வருவடிமாகப்பட்டது போதாதா? பட்டுவின் கல்யாணத்தை உத்தேசித்தாவது நீங்கள் மேல் அதிகாரிகளிடம் கொஞ்சம் நயந்து போக வேண்டாமா?”

“கந்தரி, பட்டு கல்யாணத்துக்கு என்ன அவசரம்? எப்பொழுது பார்த்தாலும் அதே நினைவாயிருக்கிறாயே. இன்னும் அவளுக்கு மழலை கூட மாறவில்லை. அதற்கு உள்ளேயா கல்யாணம்? இன்னும் மூன்று வருஷம் போகலாம். பாழாய்ப் போன நம் தேசத்தில் தான் இந்த வீண் அவசரம். எவ்வளவோ அழகாக அமைதியாக நடக்க வேண்டிய காரியங்களை, புத்தியில்லாமல் நம்மவர்கள் பேய்க் கோலமாக்கி விடுகிறார்கள் நாமாவது-”

“இதென்ன கூத்து இது? குலத்தைக் கெடுக்கும் வேதாந்தம்! உங்களுக்குக் கண் இல்லையா? குழந்தை வளர்ந்து தழைந்து நிற்கிறாளே! இந்த ஆனிக்குப் பன்னிரண்டாகிறதே. நாம் இந்தச் சாலவேடு காட்டில் இல்லாமல் வேறு எங்கேயாவதிருந்தால் இத்தனை நாள் ஊரெல்லாம் கூக்குரலிட்டிருக்குமே? போன வருஷம் நாம் கடப்பையில் இருக்கும் போதே பட்டுவைக் கன்னிகாதானம் செய்து கொடுத்திருக்க வேண்டியது. இனிமேல் கொஞ்சம் கூட ஒத்தி வைக்க முடியாது. குழந்தையின் வாழ்நாள் வீணாகிவிடும்; வீண் அபக்கியாதிக்கும் இடம்.”

“நீ அவசரப்படுவதனால் தான் அப்படி வீணாய் விடுமோவென்று பயப்படுகிறேன், சுந்தரி” என்று சாஸ்திரியார் வறண்ட குரலில் கவலையுடன் விடை அளித்தார். குழந்தை பட்டுவின் விவாக விஷயத்தில் சாஸ்திரியாரின் விருப்பம் வேறாயிருந்தது. பட்டு சுயம்வரம் செய்துகொள்ள வேண்டுமென்பது அவர் கருத்து. ஆனால் அதை வெளிப்படையாய்ச் சுந்தரியிடம் சொல்லி வெல்ல முடியுமா? ஆகையால் உபாயமாய்ச் சுற்றிச் சுழற்றிப் பேசலானார்.

“ஆமாம், சுந்தரி. இந்த வருஷம் பண்ணியாக வேண்டுமென்றால் பணம் எங்கே இருக்கிறது? பணமுங் கிடையாது; லீவும் கிடையாது.”

“பணம் ஏன் கிடைக்காது? ஊரில் உங்கள் அண்ணா அட்டகாசம் பண்ணிக் கொண்டு பத்து வருஷமாக உங்கள் பாகத்தையும் வாயில் போட்டு ஏப்பமிட்டுக் கொண்டு இருக்கிறாரே? ஊர் நிலத்தைப் பந்தகம் வைத்தோ, விற்றோ குழந்தை கல்யாணத்தை நன்றாய் நடத்துகிறது, பத்து வருஷமாக நமது பாகத்திலிருந்து நமக்கு ஒரு மூட்டை அரிசியுண்டா? பாத்திரந் தேய்க்க ஒரு குத்துப் புளியுண்டா? தர்ப்பணத்துக்கு ஒரு மூட்டை எள்ளுண்டா? அண்ணா பாடும் மன்னிபாடும் கொண்டாட்டம்.”