பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

209



மெதுவாய் டெலிபோன் பூத்துக்கும் போய்விட்டேன். அழகான சின்ன அறை. உள்ளே இருந்து பேசினால் வெளியே தெரியாது. உள்ளே போனதும் கதவு சாத்திக் கொள்கிறது. வெளியே சிவப்பு எழுத்து எரியுது. ‘உள்ளே ஆள் இருக்கு’ இந்தியாவிலே விஞ்ஞானம் முன்னேறிப் போச்சு. ஒரு பட்டனை அழுத்தினா மணி அடிக்குது. ரீசிவரைக் காதில் வைத்துக்கொண்டு “ஹலோ, எய்ட், திரி, ஃபோர், டு, ஒன், ஸெவன்.”

மீண்டும் மணி.

“ஹலோ-ஏர்லைன்ஸா-டில்லிக்கு டிக்கட் இருக்கா? எத்தனை மணிக்கு-ஒன்று இருபதுக்கு கிளம்புதா? தேங்க்யூ.”

பக்கத்தில் இருக்கும் உண்டியலில் பதினைந்து பைசாவைப் போட்டுவிட்டு வெளியில் வருகிறேன். கதவு சாத்திக் கொள்கிறது. பச்சை வெளிச்சம். ‘நீங்கள் உள்ளே வரலாம்’ என்று விளக்கு எரிகிறது.

ஒரே வெயில். துருத்தி வைத்து தணலை மேலே ஊதுவதைப் போல வெயில் தகிக்கிறது. பெரியம்மை கொப்புளங்களைப் போல உடம்பெல்லாம் வியர்வை முத்துக்கள். சட்டை முதுகோடு ஒட்டிக்கொண்டுவிட்டது. ரத்த வியர்வை. நெற்றி வியர்வையை வழித்துவிட்டால் கீரைப் பாத்திக்கு நீர்பாய்ச்சிவிடலாம். தார் ரோட்டில் எங்கே கீரை விதைப்பது? புஞ்சையில் நான் சிறுவனாக இருந்தபோது விதைத்த கீரை இப்பொழுது முப்பது வருஷங்களுக்குப் பிறகு பசுமையாய் முளைத்திருக்கிறது. அதைப் பறித்து நாளை மசித்துவிடலாம்.

மவுண்ட்ரோட்டில் ஒரு குடிசை மிக அழகாக புத்துலக உத்திகளை எல்லாம் பயன்படுத்தி அமெரிக்கா, ரஷ்யா எல்லாம் சென்று திரும்பின. கட்டிடக்கலை நிபுணர்கள் கூட்டு முயற்சியிலே உருவாக்கி இருக்கிறார்கள். வாசலில் “இண்டியன் ஏர்லைன்ஸ் கார்ப்பரேஷன்” என்ற போர்டு குழந்தை எழுதும் எழுத்து வடிவத்தில் எழுதித் தொங்குகிறது. படியில் அடியெடுத்து வைக்கிறேன். உள்ளே போகலாமா என்ற தயக்கம்.

“கெட்இன்...கெட்இன்.”

“டில்லிக்கு என்ன டிக்கெட்?”

“நூத்திப் பத்தொன்பது ரூபா எட்டு பைசா.”

“எட்டு பைசா என்னய்யா எட்டு பைசா? கொசுறா?”

“சரி ரவுண்டாக் கொடுங்க.”

“ரவுண்டுன்னா 119 ரூபா 5 பைசாவா?”

“உங்க இஷ்டம்.”

“நூத்திப் பத்தொன்பது ரூபாய் தான் தருவேன். கொடுப்பியா?”

“சரி கொடுங்க... எட்டு பைசாவை ரைட்டாஃப் செஞ்சுடறேன்.”