பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

211


“நீ தானே ப்ளேனுக்குப் போகணும்?”

“ஆமாம்.”

“அப்போ ஒட்டு.”

அடதெய்வமே! அதில் பாதியை வெட்டி இதிலே ஒட்டுகிறேன். இதில் பாதியை வெட்டி அதிலே ஒட்டுகிறேன்.

“சரியாப்போச்சா?”

“சரிதான்.”

“இப்பவே வயசு முப்பது அய்யா... இன்னும் எத்தனை வருஷம் காத்துக்கிட்டு இருக்கணும். ப்ளேனுக்க நேரம் ஆச்சா”

“இன்னும் நாப்பது நிமிஷத்திலே ப்ளேன்.” “முப்பது வருஷமா காத்துக்கிட்டு இருந்தேனே இன்னும் நாப்பது நிமிஷந்தானா?”

“ஓடு ஓடு நேரமாச்சு. ஓடு”

“இங்கேருந்து ஏரோட்ரோம் வரைக்குமா?”

“இல்லே...வழியிலே டாக்சியெ புடிச்சுக்க” ஓடுகிறேன். வேட்டி அவிழ்ந்து போச்சு... ஒரு முனையை கையிலே புடிச்சுக்கிட்டு ஓடுகிறேன்.

“டாக்கி... டாக்சி!”

நிறுத்தாமே போறானே! இன்னும் ஓடுவோம். வழி குறுகுமே.

“டாக்சி...டாக்சி!” -

பய நிறுத்தமாட்டானா? வேட்டி அவுந்து தரையிலே புரளுது.

“டாக்சி, டாக்சி” கண்ணெல்லாம் ரோட்டு மேலேயா? அட போகட்டும். காதெங்கே போச்சு... அடைச்சுப் போச்சா... மனிதாபிமானமே மரத்துப் போச்சா... இங்கே ஒருத்தன் காட்டுக் கத்தலா கத்தறது காதிலே கேக்கலையா?

“டாக்சி.டாக்சி”

‘பசங்க நிறுத்த மாட்டானுங்க... அவன் அவன் பாடு அவனவனுக்கு. நிறுத்த மாட்டானுங்க. வேட்டி அவுந்து ரோட்டிலே போச்சு... அட போகட்டுமே... போனா போகட்டுமே... ப்ளேனே போகப் போகுதாம். வேட்டி போனாக்க என்னவாம்’

‘டாக்சி... டாச்சி’

எனக்குப் பின்னே வந்து எத்தனை பய முன்னே ஓடிப்பூட்டான். என்னை ஏத்திக்கிட்டுப் போனா என்ன? குடியா முழுகிப்பூடும்? சும்மாத்தான போறான். அவன்கிட்டே கார் இருக்குங்கற துணிச்சல்லே போறானா?

“டாக்சி... டாக்சி”

அவனுங்க எங்க நிறுத்தப் போறானுங்க... முப்பது வருஷம் -இருபது நிமிஷம் ஆச்சு. நேரம் குறுகிப் போச்சு.