பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

212

சோலை சுந்தரபெருமாள்


நேரம் குறுகினா வழியும் குறுகணும் இல்லே. ஆனா வழி குறுகல்லியே. நீண்டுக்கிட்டில்லே போகுது. குறுக்கு வழியாப் போனால் என்ன?

புஞ்சையிலேருந்து ஆக்கூருக்குப் போற பாதை குறுக்கு வழி. நிலமெல்லாம் வெடிச்சுக் கிடக்கு. எலி புடிக்க வரப்பெல்லாம் வெட்டிக் கிடக்கு. புழுதி உழுத நிலம் கட்டியும் முட்டியுமாய் பரவிக் கிடக்கு. வரப்பிலே துவரை வெட்டிய அடிக்கட்டை ஈட்டி ஈட்டியா நீட்டிக் கொண்டு நிக்குது. செருப்பு கிழிந்து போச்சு. ரத்தமும் சதையுமா வழியுது. பக்கத்திலே பெரிய திடல், ஸ்பெயின் தேசத்துக் காளை விளையாட்டு நடக்குது அங்கே. காளையை ஈட்டியாலே மேலெல்லாம் குத்தி இருக்கான்கள். ஈட்டி குத்திக்கொண்டு மேலே தொங்குது. எதிரிலே நின்னுக்கிட்டு கலர் துணிய காண்பிச்சு மிரட்டறான். இதுவா மீனம்பாக்கத்துக்குப் போற பாதை? இது ஆக்கூர் பஸ் ஸ்டாண்டுக்குப் போகிற பாதையில்லையா? இதிலே போனா பொறையார் பஸ்ஸைத்தானே புடிக்கலாம். இல்லே- இல்லே. இது குறுக்குப்பாதை. மீனம்பாக்கம் இன்னும் தொலைவில் இல்லே. தெரியாத பாதையிலே போறதை விட தெரிஞ்ச பாதையிலே போறது நல்லது இல்லையா? போற இடத்துக்கு சிக்கிரம் போகலாம். மீனம்பாக்கம் ரொம்பத் தொலைவில் இல்லே. முப்பது வருஷம் முப்பத்தொன்பது நிமிஷம் ஆச்சு.

“டாக்சி...டாக்சி”

எங்கே போறானுங்க இப்படி? “யோவ் நான் ப்ளேனுக்குப் போகணும் ஏத்திக்கிட்டுப் போங்கய்யா!”

“போய்யா.போய்யா கிண்டிலே ரேசய்யா!”

“இந்த அர்த்த ராத்திரியிலேயா?”

“ஆமாய்யா ரேசு... நேரமாச்சு போறேன்.”

“நிறுத்துங்கய்யா நானும் வரேன். மீனம்பாக்கத்திலே கொண்டு விட்டுடுங்க.”

“போய்யா போய்யா... கிண்டிலே ரேசய்யா”

“ரேசுன்னா என்னய்யா... இப்பிடி குடல் தெரிக்க ஓடுறே. குதிரையா ஓடுது.. இல்லே நீயே ஓடுறெயா?”

“பணம் கொட்டிக் கிடக்குது அள்ளிக்கிட்டு வரப்போறேன்.”

“பணமா?”

“என்னய்யா வாயைப் பொளக்கிறே. நீயும் ஓடி வா. அள்ளிக்கிட்டு வரலாம்.”

“எப்பிடியய்யா பணம் கொட்டிக்கிடக்கும். குதிரை கொள்ளைத் தின்னுட்டுப் பணம் பணமா லத்தி போட்டுக்கிட்டே ஓடுமா?”