பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஆறுமுகசாமியின் ஆடுகள்

றுமுகசாமி புங்கமரத்துக் கிளையைத் தாவிப் பிடித்து வளைத்து ஒரு சின்ன கிளையை முறித்தான். ஆனால் கிளை முறியவில்லை. பல்லைக் கடித்துக் கொண்டு கிளையை திருகி முறுக்கினான். முறுக்க முறுக்க கிளை மெதுவாக முறிந்து கையோடு வந்தது இடது கையால் தழைகளை உருவி போட்டுக்கொண்டு அவன் சுற்றும் முற்றும் பார்த்தான். ஆடுகள் வாய்க்கால் மேட்டிலிருந்து இறங்கி சின்னபண்ணையை நோக்கிச் சென்றன.

“தோ...தோ...” ஆறுமுகசாமி ஆடுகளைப் பார்த்துக் கத்தினான். அவன் குரல் சின்னபண்ணை தோட்டத்தை நோக்கிச்சென்ற ஆடுகளுக்குக் கேட்டதுபோலும். இரண்டு பெரிய ஆடுகள் தலையைத் திருப்பிப் பார்த்தன.

அவன் மறுபடியும், “தோ...தோ...” என்று கத்தினான். ஆனால் தலையைத் தூக்கிப் பார்த்த இரண்டு ஆடுகளும் மற்ற ஆடுகளோடு சேர்ந்து கொண்டு சின்ன பண்ணை தோட்டத்தையொட்டி சென்றன.

அவன் கால்சட்டையை மேலே தூக்கிவிட்டுக் கொண்டு முன்னே ஓடினான். நேற்று கருப்பு ஆடு தன் இரண்டு வெள்ளைக்குட்டிகளோடு சின்னபண்ணை கத்தரி தோட்டத்திற்குள் புகுந்துவிட்டது. சின்னபண்ணை காவல் முனியாண்டித்தேவர் ஒரு வெள்ளை குட்டியைப் பிடித்துக் கட்டிவிட்டார். கருப்பு ஆடு கத்திக் கொண்டு மிரண்டு ஓடிவந்தது. அதன் பின்னால் ஒரு வெள்ளைக்குட்டி நொண்டிக் கொண்டு வந்தது.

புளியமரத்தடியில் கால்களை நீட்டி உட்கார்ந்து சரித்திரம் படித்துக் கொண்டிருந்த அவன் திரும்பிப் பார்த்தான். கருப்பாடு சின்னபண்ணைத் தோட்டத்தைப் பார்த்துப் பார்த்துக் கத்தியது. அவன் எழுந்து தலையில் கட்டியிருந்த சிவப்புத் துண்டை அவிழ்த்துத் தோளில் போட்டுக்கொண்டு வாய்க்கால் ஓரமாக நடந்தான். காலில் ஒரு நெருஞ்சிமுள் குத்தியது. குனிந்து காலை மேலே தூக்கிப் பிடுங்கிப் போட்டுவிட்டு நொண்டிக்கொண்டு சின்னபண்ணைத் தோட்டத்துப் பக்கம் சென்றான்.