பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216

சோலை சுந்தரபெருமாள்


சின்னபண்ணைத் தோட்டத்துக் காவல் முனியாண்டித்தேவர் பம்பு சுவர் மீது சாய்ந்து உட்கார்ந்து தண்ணிருக்குள் காலைவிட்டு ஆட்டிக் கொண்டிருந்தார். பம்பில் இருந்து பாய்ந்த தண்ணீர் அவர் காலை அலம்பிக் கொண்டு சென்றது. அவர் குனிந்து பச்சை பெல்டில் இருந்து சுருட்டை எடுத்து வாயில் வைத்து பற்றவைத்துக் கொண்டார்.

ஆறுமுகசாமி வாய்க்கால் கரையேறி மூங்கில் படலைத் திறந்துகொண்டு கத்தரித் தோட்டத்து வரப்பு மேலேயே ஓடிவந்தான். சுருட்டை கையில எடுத்துக்கொண்டு முனியாண்டித்தேவர் திரும்பிப் பார்த்தார். அவன் தயங்கி நின்றான். ஒதிய மரத்தடியில் கட்டியிருந்த வெள்ளை ஆடடுக்குட்டி கத்தியது. அவன் சலசலத்தோடும் தண்ணீரில் இடது காலை வைத்து துவரைச் செடியை விலக்கிக்கொண்டு ஓடி முனியாண்டித்தேவர் முன்னேபோய் நின்றான். அவர் இவனை கவனிக்காதது மாதிரி லேசாகக் கண்களை மூடி சுருட்டை வாயில் வைத்து இழுத்துக் கொண்டிருந்தார்.

அவர் முன்னே ஓரடியெடுத்து வைத்தான்.

முனியாண்டித்தேவர் திரும்பி உட்கார்ந்து கொண்டார்.

“மாமா” என்றான் ஆறுமுகசாமி.

அவர் வாயில் இருந்த சுருட்டை கையில் எடுத்துக் கொண்டு புகையை வேகமாக ஊதினார். தலை மட்டும் என்னவென்று கேட்பது மாதிரி அசைந்தது.

“மாமா... அது வந்துங்க மாமா”

“அது என்னடா வந்து போயி... என்னென்னு சொல்லு-”

அவன் லேசாக ஒரு சிரிப்புச் சிரித்தான். முனியாண்டித்தேவர் சுருட்டை வாயில் வைத்து ஒரு இழுப்பு இழுத்தார். இரண்டு கன்னமும் ஒட்டிக்கொள்ள காற்றெல்லாம் வாய்க்குள் புகுந்தது. அவன் மெதுவாக ஒரடிமுன்னே எடுத்து வைத்தான்.

“உம்”

“மாமா”

“என்னடா”

“ஆட்டுக்குட்டி மாமா” ஒதியமரத்தில் கட்டிப் போட்டிருந்த ஆட்டுக்குட்டியை சுட்டிக்காட்டினான்.

“நாலஞ்சு ஆடும், ஐஞ்சாறு குட்டியுமா தோட்டத்துல புகுந்து ஒரே அதம். புடிச்சிக்கட்டி பட்டியில் கொண்டுபோய் தள்ளலாமென்னா போரை துள்ளிப் பாய்ஞ்சி போயிடுச்சி. கடைசியில இந்தக் குட்டிதான் மாட்டுச்சி... எங்கே போயிட போவுது...”

“நம்ம ஆடுங்க மாமா”