பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

சோலை சுந்தரபெருமாள்


“சரி, சரி. பெண் பிள்ளைகள் பேச்சுக்கு அளவுண்டோ? நமது பாகத்தை என்ன செய்வது? விற்க முடியுமா? சுட முடியுமா? அண்ணா கலைத்து விடுவாரே! ஊர் நாட்டாண்மை அவரல்லவோ? ஊரில் அவர் இட்டதுதானே சட்டம்?”

“அது போகட்டும். இப்பொழுதுதானே பனைமரம் சாற்றுக் குத்தகைக் காலம்? 5000 மரம் முத்திரை போட்டால் ரூ. 1000 வருமென்றும், சாலவேடு ரேஞ்சு கிடைத்து மூன்று வருஷகாலம் அங்கே இருந்து விட்டால் குபேரனாய் விடலாமென்றும் வாயப்பந்தல் போட்டீர்களே. அப்படி சாலவேடு ரேஞ்சு கிடைத்தால் திருப்பதி வேங்கடாசலபதிக்குக் கூட அபிஷேகம் பண்ணி வைப்பதாக வேண்டிக் கொண்டீர்களே? எல்லாம் மறந்து போய் விட்டதோ?”

“ஆமாம், பின்னால் வரப்போகும் மேல் வரும்படியை நம்பி யார் கடன் கொடுப்பார்கள்? விஷயம் புரியாமலே நீ சொன்னதையே சொல்லுகிறாயே, கந்தரி!”

“இந்தக் கதையெல்லாம் எனக்குத் தெரியாது. எப்படியாவது பட்டுவின் கல்யாணம் இந்த ஆனிக்குள்ளேயே நடந்தாக வேண்டும். உங்கள் பகவத்கீதையையும் ராமாயண பாராயணத்தையும் மூன்று மாசத்துக்குக் கட்டி வைத்துவிட்டுச் சோம்பலையும் விட்டு நமது ஜில்லாப் பக்கம் போய் அலைந்து திரிந்து வரனைப் பாருங்கள். பனந்தோப்பைச் சுற்றுவதில் உள்ள பாதி ஜாக்கிரதையுடன் வரன் தேடி முயற்சியும் செய்தால் விவாகம் நிச்சயம் முடிந்துவிடும். பி.ஏ. படிக்கும் பையனாகப் பார்த்துக் கையில் ரூ. 1000 கொடுத்து மேலே பி.எல்., படிக்கவும் நாம் ஏற்றுக் கொண்டால் மாதமாதம் மணியார்டர் தடையின்றிப் பண்ணிவிடலாம்.”

“ஆமாம் சுந்தரி, நீ போடும் ‘பிளான்’ நன்றாய்த்தான் இருக்கிறது. ஆனால் அதற்குக்கூடக் கையில் குறைந்தது ரூ.2000 வேண்டுமே? எங்கே போகிறது? பனைமரம் முத்திரை போடுவது அடுத்த மாதம் ஆரம்பித்தாலும் ஆடியில் தானே முடியும்? அப்பொழுது பணமும் சில்லறை சில்லறையாகத் தான் வரும். மொத்தமாக முன் பணம் கிடைக்காதே. அதற்குள் கல்யாணக் கோர்ட்டுச் சாத்தியாய் விடும். கள்ளுக் காலத்துக்கும் கல்யாண காலத்துக்கும் ஒத்துக் கொள்ளாது போல் இருக்கிறதே, என்ன செய்வது?”

சுந்தரி சற்று யோசித்து, “அப்படியானால் நம்ப துரசுவைத் தஞ்சாவூர்ப் பக்கங்களில் ஜாதகம் வாங்கி அனுப்பும்படி ஏற்பாடு செய்யலாமே?”

“நம்ம துரசு உன் தம்பி துரைசாமியா? அவன் எதற்கு லாயக்கு? அவனிடம் பணத்தைக் கொடுத்தால் காபிக் கிளப்பிலும், நாடகக் கொட்டகையிலும், தாசி வீட்டிலும் செலவழித்து விட்டுப்