பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

218

சோலை சுந்தரபெருமாள்


மறித்துக் கொண்டிருந்தார்கள். அவன் அப்பா கலியபெருமாள் வேனை மெதுவாக ஒட்டிக்கொண்டு வந்தார். ஒரு பையன் பதினாறு பதினேழு வயதிருக்கும். சாலையின் நடுவில் நின்று வேனை மறித்தான். வேன் நின்றது. ஐந்நூறு ஆட்கள் ஓடிவந்து வேனைச் சூழ்ந்து கொண்டார்கள். வேன் பின்னால் தடியாலும் கல்லாலும் அடிப்பது மாதிரி சப்தம் கேட்டது. கலியபெருமாள் வேனில் இருந்து இறங்கி பின்னால் சென்றார். சாலையோரத்து தூங்கு மூஞ்சிமரம் சட சடவென்று சாய்ந்தது. அவர் கிளைகளுக்கு இடையில் சிக்கிச் செத்துப்போனார். செத்து இரண்டு நாட்கள் கழித்துதான் பள்ளிக்கூடத்தில் இருக்கும்போது ஆட்கள் வந்து சொன்னார்கள்.

அவனும், அத்தானும் திண்டிவனத்திற்கு வந்து அப்பா உடலை அடிபட்டு நொறுங்கிப்போன வேனில் வைத்து வீட்டிற்குக் கொண்டு வந்தார்கள். உடல் வந்த சற்று நேரத்திற்கெல்லாம் வீட்டின் முன்னே பெரிய கூட்டம் கூடிவிட்டது. வட்டச் செயலாளர் மதிவாணன் பெரிய கொடியை அப்பா மீது கோத்தினார். பொருளாளர் சண்முகசுந்தரம் அத்தானிடம் ஒரு கவர் கொடுத்தார். அத்தான் இவன் பையில் திணித்தார். இரண்டு நாட்கள் கழித்து கவரைத் திறந்தபோது ஐயாயிரம் ரூபாய் இருந்தது. அத்தான் எண்ணிப்பார்த்துவிட்டு, “அம்மா கிட்டக்கொடு” என்று இவனிடம் கொடுத்தார்.

அப்பா காரியமெல்லாம் முடிந்த பத்து நாட்கள் கழித்து அத்தான் ஒருநாள் வீட்டிற்கு வந்தார். அம்மா கதவுக்குப் பின்னால் மறைந்து கொண்டாள்.

அத்தான் இவனைப் பிடித்து இழுத்துப் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு, ‘என்ன இப்பப் பண்ணலாம் சொல்லு சாந்தி” என்றார். சாந்தி என்பது இவன் அக்கா.

“நீங்கதானே சொல்லணும்”

அத்தான் இப்படியும், அப்படியும் ஒரு பார்வை பார்த்தார். மடியில் கிடந்த துண்டை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டார். ஆறுமுகசாமி கொஞ்சம் பின்னால் நகர்ந்தான்.

“உம். என்ன பண்ணலாம். நீ சொல்லு” அத்தான் அவள் கையைப் பிடித்து இழுத்துப் பக்கத்தில் வைத்துக் கொண்டார். அவன் நிமிர்ந்து அம்மாவைப் பார்த்தான் பாதிமுகம் தான் கதவு மறைப்பில் தெரிந்தது.

“ஒரு கறவமாடு வாங்கலாம்” என்றாள் சாந்தி.

“மாடா”

“பின்ன... நீங்கதான் சொல்லுங்க”

“ஆடு வாங்கலாம் சாந்தி. அரசாங்கத்துல மானியம் தர்றாங்க... பேங்கில லோன் வேற கிடைக்கும்.

“ஆடா”