பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

219


“தென்னந்தோப்பு பசுபதி படையாச்சி ஆடு வாங்கி வளர்த்து பெரிய ஆளா ஆகிட்டான். ஆடுன்னா கறி ஐம்பது ரூபாக்குப் போகுது. இதெல்லாம் பாக்கறப்ப ஆடு வளர்க்கறது தான் சரின்னு படுது”

“அப்ப ஆடே வளர்க்கலாங்க”

“பள்ளிக்கூடம் போயிட்டு வந்து தம்பிகூட பாத்துக் கொள்ளுவான்.”

‘இல்ல... இல்ல...அவன் படிக்கட்டும்... நான் பாத்துக்கறேன்” என்றாள் அம்மா கதவு மறைப்பில் இருந்து கொஞ்சம் வெளியில் வந்தபடி.

“அத்த சொல்லுறதுதான் சரி”

“என்னா?”

“தம்பி படிக்கட்டும்”

“ஆடு மேய்க்கறது கட்டுறது எல்லாம் கஷ்டம் இல்லையா?” என்றாள் சாந்தி. -

“கஷ்டமென்று பாத்தா சாப்பிட முடியுமா?” என்றாள் அம்மா.

“சாந்தி, நீ கொஞ்சம் வாய மூடிக்கிட்டு சும்மா இரு.”

“இப்ப நான் என்ன சொல்லிட்டேன்.”

“நீ ஒண்ணும் சொல்லுல. சும்மா இரு”

“எதுக்கு உங்களுக்கு இப்ப கோபம் வருது”

“எனக்கென்னா கோபம்.”

“சாந்தி. நீ இங்கவா” அம்மா உள்ளே இருந்து வெளியில் வந்தாள்.

அத்தான் திரும்பி சாந்தியை ஒரு பார்வை பார்த்துவிட்டு எழுந்து வாசல் பக்கம் வந்தார். அவர் கூடவே இவனும் எழுந்து வந்தான். வாசல் பூவரசு மரத்தில் இருந்து ஒரு காக்கைக் கத்திக்கொண்டே இருந்தது. இவன் குனிந்து ஒரு கல்லை எடுத்து காக்கையை நோக்கி வீசினான். அது பறந்துபோய் கல்யாண முருங்கை மரத்தில் உட்கார்ந்தது.

“நீ இங்க வா” என்று அத்தான் அவனை அழைத்துக் கொண்டு பேங்கிற்குள் சென்றார். பேங்கில் மானேஜர் இல்லை. வெளியில் போயிருப்பதாகச் சொன்னார்கள்.

“நாளைக்கு உனக்குப் பள்ளிக்கூடமா”

“ஆமாங்க அத்தான்.”

“நீ பள்ளிக்கூடம் போ.”

இரண்டு மாதங்கள் கழித்து பேங்கில் அம்மாவுக்கு லோன் சாங்ஷன் ஆனது. அதற்கு கஷ்டப்பட வேண்டியதிருந்தது என்று அக்கா சொன்னாள். ஆனால் அத்தான் ஒன்றும் சொல்லவில்லை. அவன் அம்மாவை அழைத்துக் கொண்டு பேங்கிற்குச் சென்றான். பேங்கு வாசலில் ஒரு பெரிய கூட்டம்.