பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

220

சோலை சுந்தரபெருமாள்


தெரிந்த முகம், தெரியாத முகம் எல்லாம் கூடியிருந்தது. வண்டிக்காரத்தெரு அன்னம்மா அம்மா பக்கமாக வந்து, “நல்லா இருக்கிறியா அண்ணி என்றாள். அம்மா தலையசைத்தாள். கண்களில் கண்ணீர் திரண்டு வருவது மாதிரி இருந்தது. அம்மா திரும்பி இவன் கையைப் பிடித்துக் கொண்டாள்.

அத்தான் அவன் பக்கமாக வந்து ஜாடை காட்டினார். அவன் அம்மாவை அழைத்துக்கொண்டு பேங்கு உள்ளே சென்றான். மானேஜர் உட்காரச் சொன்னார். அம்மா தயங்கி நின்றாள்.

“உட்காருங்க அம்மா.”

அம்மா உட்கார்ந்தாள்.

“கையெழுத்து போடுவிங்க இல்ல”

அம்மா தலையசைத்தாள்.

லேசான பச்சைக் காகிதத்தில் ஐந்தாறு இடத்தில் கையெழுத்துப் போடச் சொன்னார். அம்மா கோணல் மாணலாக பெரியநாயகி என்று கையெழுத்துப் போட்டாள். அப்பறம் அத்தான் கையெழுத்து. பேங்கு மானேஜர் செக்கைக் கொடுத்தார். அம்மா வாங்கிக் கொண்டு கையெடுத்துக் கும்பிட்டாள்.

“இந்தக் கடன கட்டிக்கிட்டே வந்தா அப்பறம்கூட கடன் கொடுப்பாங்க அம்மா.”

“அதெல்லாம் கட்டிடுவோம் சார்” என்றார் அத்தான்.

பேங்கு மானேஜர் பார்வை இவன் மேல் விழுந்தது.

“தம்பி என்ன பண்ணுறான்.”

“படிச்சிக்கிட்டு இருக்கிறான் சார்”

“நல்லா படிக்க வையுங்க...நாளைக்கு பேங்குக்குயெல்லாம் வேலைக்கு வர்லாம்.”

“பள்ளிக்கூடத்திலேயே இவன்தான் சார் பஸ்ட்... நெறையா பரிசு எல்லாம் வாங்கி இருக்கான் சார்.”

கூட்டமாக ஐந்தாறு ஆட்கள் உள்ளே வந்தார்கள்.

“அப்ப நாங்க வர்றோம் சார்”

“வாங்க”

அம்மா எழுந்து அவன் பின்னாலேயே வந்தாள். வெளியில் வந்ததும் அத்தான் அம்மா பக்கம் திரும்பி “நம்ப தியாகராஜ வாண்டையார் பையன். அது வந்ததுல இருந்துதான் கடன் எல்லாம்; ஒழுங்கா கொடுத்துக்கிட்டு வருது” என்றார்.

அம்மா பதிலொன்றும் சொல்லாமல் வெளியில் கடன் வாங்குவதற்கு நிற்கும் கூட்டத்தையே பார்த்தபடி இருந்தாள்.

ஆறுமுகசாமி பள்ளிக்கூடம் விட்டு வீட்டிற்கு வந்தபோது பூவரசு மரத்தைச் சுற்றிலும் ஆடுகள். கருப்பு, பழுப்பு, வெள்ளையும் கருப்புமாக— என்று பல்வேறு நிறத்தில். அப்புறம்