பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

221


பெரிய ஆடு... குட்டிகள். அவன் எண்ணிப் பார்த்தான். இருபத்தோரு ஆடுகள். கையைச் சுழற்றியபடி உள்ளே ஓடினான். அரிசி புடைத்துக் கொண்டிருந்த அம்மா திரும்பிப் பார்த்தாள்.

“அம்மா.ஆடு அம்மா”

“நம்ப ஆடுதான். இருபத்தோரு ஆடு. அத்தான் மத்தியானமா பசுபதி படையாச்சிக்கிட்ட இருந்து வாங்கிக்கிட்டு வந்தாங்க.”

“பெரிசு பெரிசா இருக்கு அம்மா.”

“தழையெல்லாம் ஒடிச்சாந்து போட்டு பத்தரமா பாத்துக்கணும்.”

“சரி அம்மா.”

“கல்லுக்கார மாமா வீட்டுல அலக்குக் கேட்டிருக்கேன். அதெ வாங்கிக்கிட்டு வா... அப்படியே இஞ்சித் தோப்புல கொஞ்சம் பூவரசு இல ஒடிச்சிக்கிட்டு வா.” -

அவன் குதித்து வெளியில் ஓடிவந்தான். பூவரசு மரத்தடியில் கட்டப்பட்டிருந்த ஆடுகளில் சில கத்தின. அவன் தரையில் இருந்து மேலே எம்பி கைக்கு எட்டிய பூவரசு கிளையைப் பிடித்து ஒடித்து ஆடுகளுக்கு மத்தியில் போட்டுவிட்டு கல்லுக்கார மாமா வீட்டை நோக்கி நடந்தான்.

மூன்றாவது மாதம் கொம்பாடு இரண்டு குட்டிப் போட்டது. அவன் ஈச்ச மட்டையெல்லாம் வெட்டி வந்து போட்டான். ஒரு குட்டியைத் தூக்கினான். கொம்பாடு தலையைச் சாய்த்துக் கொண்டு முட்ட வந்தது. அவன் கொஞ்சம் போல பின்னுக்கு நகர்ந்து கொண்டான்.

“ஆட்டுக்கிட்ட என்ன விளையாட்டு” என்றாள் அம்மா.

“அது முட்ட வருது அம்மா.”

“குட்டிபோட்ட ஆடு. அதெ விட்டுட்டு மத்த ஆட்டயெல்லாம் மேய்ச்சலுக்கு ஓட்டிக்கிட்டு போ.”

ஆறுமுகசாமி கொல்லைப்பக்கம் போய் சின்ன அலக்கைத் தூக்கிக் கொண்டு வந்தான். அம்மா கட்டியிருந்த ஆட்டையெல்லாம் அவிழ்த்துவிட்டான். பின்னால் சென்ற ஆட்டை முன்னே துரத்திவிட்டான்.

‘பராக்குப் பார்த்துக்கிட்டு அங்க இங்க நிக்காம பத்தரமா ஆட்டையெல்லாம் மேய்ச்சிக்கிட்டு வா”

அவன் தலையசைத்தான்.

“என்ன பண்ணைத் தோட்டத்துப் பக்கம் ஆட்ட விட்டுடாதே முனியாண்டி அண்ணன் ரொம்ப கோவிச்சிக்குது.”

“இல்லம்மா” அலக்கை இடது தோளில் சாய்த்துக் கொண்டு, பையை வலது கையில் எடுத்துக்கொண்டு நடந்தான்.

“அத என்ன பை”

“புஸ்தகம் அம்மா, படிக்க”