பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

222

சோலை சுந்தரபெருமாள்


அம்மா அவனை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்தான்.

“அடுத்த வாரம் பரிட்சை அம்மா”

“படிக்கறேன்னு ஆட்ட விட்டுடாதே. அப்ப அப்ப ஆட்டையும் பாத்துக்க”

“சரி அம்மா” பின்னால் நின்ற ஆட்டை எல்லாம் முன்னே ஓட்டிக் கொண்டு சென்றான்.

ஆற்றில் தண்ணீர் சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது. தண்ணீரைக் கண்டதும் ஆடுகள் பயந்தது மாதிரி நின்றுவிட்டன. அவன் ச்சூ என்று கத்தி, அலக்கை முன்னே சுழற்றி ஆடுகளை விரட்டினான். ஆடுகள் அடிக்குப் பயந்து தண்ணீரில் இறங்கி அக்கரைக்கு சென்றன. அவன் எல்லா ஆட்டையும் ஒன்று சேர்த்து பாப்பான் சாவடி பக்கம் ஓட்டிச் சென்றான். அதுதான் பெரிய மேய்ச்சல் புறம்போக்கு. அதற்கு அப்பால் சுடுகாடு. சுடுகாட்டை ஒட்டி பெரிய பெரிய பூவரசு மரங்கள். பூவரசு மரத்தில் ஏறி நான்கைந்து கிளைகளை வெட்டி கீழே போட்டான். முன்னே சென்ற ஆடுகள் கத்தியபடி ஓடிவந்தன. அவன் அலக்கை பூவரசு மரத்தில் சாத்திவிட்டு இலுப்பை மரத்தடியில் உட்கார்ந்து இங்கிலீஷ் புத்தகத்தை எடுத்தான், அரை பரிட்சையில் அதில்தான் மார்க்குக் குறைவு.

“கொஞ்சம் கஷ்டப்பட்டு படி. நல்ல மார்க்கு வாங்கலாம்” என்று பேப்பர் கொடுக்கும்போது கனகசபை சார் சொன்னார். இரண்டு பாடங்களைத் தள்ளினான், செய்யுள் படிக்கலாம் போல இருந்தது. முதல் செய்யுளை எடுத்து வைத்துக்கொண்டு படித்தான். வெய்யில் மூஞ்சியில் அடித்தது. புத்தகப் பையைத் தூக்கிக்கொண்டு முந்திரி மரத்தின் கீழே உட்கார்ந்து கொண்டான். அப்பறம் நோட்டை எடுத்து வைத்துக்கொண்டு எழுத ஆரம்பித்தான். படிப்பதை விட எழுதுவது சுலபம் மாதிரி இருந்தது. கொஞ்சம் பின்னால் சாய்ந்து முந்திரி மரத்துக்கிளையில் நன்றாகச் சாய்ந்துகொண்டு எழுத ஆரம்பித்தான். அவன் பால்பாயிண்ட் பேனாவால் அழுத்தி அழுத்தி எழுதிக் கொண்டிருந்தான்.

பெரியஆடு சின்ன கிளையை இழுத்துக்கொண்டு கூந்தல் பனை மரத்துப் பக்கம் சென்றது. அதைத் தொடர்ந்து இரண்டு மூன்று ஆடுகள் சென்றன. அப்டியே ஆடுகள் கூந்தல் பனையைத் தாண்டி ஐயனார் கோவில் பக்கம் சென்றன.

மோட்டார் சைக்கிளில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் இப்படியும், அப்படியும் பார்த்தபடியே வந்தார். மோட்டார் சைக்கிள் சப்தத்தைக் கேட்டதும் ஆடுகள் மிரண்டு தலையைத் தூக்கிப் பார்த்தன. ஆட்டைத் தாண்டிப்போன சப்-இனஸ்பெக்டர் சரக்கென்று மரத்தடியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். கீழே இறங்கி எச்சிலைத் துப்பிவிட்டு ஒரு சிகரெட் எடுத்து பற்ற