பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

231


ஆச்சரியத்துடன் கவரை வாங்கிக்கொண்டார். “ஸோ நீட் ஸோ ப்யூட்டிஃபுல்!" கவரைப் பெற்றுக்கொண்டதற்கு கையெழுத்துப் போடும் படிக் கேட்டபோது, “பர்ஸனல் தபாலுக்குக்கூட ரிஜிஸ்டரா?” என்றார்.

“உங்க கையெழுத்து எவ்வளவோ அழகா இருக்கு; கையெழுத்துக்கும், ஒருத்தர் மனசுக்கும் சம்பந்தம் உண்டாம். உங்களுக்கு மிருதுவான மனசு. ஆம் ஐ ரைட்?” என்றேன்.

“யூ நோ. இதெல்லாம் திரும்பி வந்த கதைகள். நான் எழுதினது. வழக்கமா இதுகள் திரும்பி வந்தா ரொம்பக் கஷ்டமா இருக்கும். சோர்வா படும். இப்ப என்னவோ கையில் கர்வமா தூக்கிட்டுப் போலாம்போல இருக்கு. ப்ளிஸ், அடுத்த தடவையும் திரும்பின கதையை யார் கண்ணுக்கும் படாம இதேமாதிரி கொடுத்துடுங்க. தாங்க்யூ வெரிமச்.”

பதில் ஏதும் சொல்லாமல் நின்று கொண்டிருந்தேன். திடீரென்று மேலே வீசப்பட்ட புகழ்ச்சியையும் கலகலப்பையும் தாங்கமுடியாமல் கஷ்டப்பட்டேன்.

பிற்பகல் இடைவெளி வழக்கம்போல் போரடித்தது. “நான் அந்தக் கதைகளைப் படிச்சுட்டுக் கொடுக்கட்டுமா?’ என்றேன்.

பளிரென்று ஒரு வெள்ளைச் சிரிப்பு. “யூ மீன் இட்? ஓ.கே. படிச்ச பிறகு வெளிப்படையா அபிப்பிராயம் சொல்வதானால் தருகிறேன்.” நான் தலையசைத்தேன். கவரை எடுத்து வந்து கதைகளைப் பிரித்துப் படித்தேன்.

கிறுக்கல் கையெழுத்து எந்தப் பத்திரிக்கைக்காரன் இதைப் படிப்பான்?

முதல் இரண்டு கதைகளையும் வீட்டிற்கு எடுத்துப்போய் சுத்தமாய் எழுதி வேறொரு பத்திரிக்கைக்குப் போஸ்ட் பண்ணினேன். பதினைந்து நாட்கள் கழித்து கதை பிரசுரமானதை நான் விரித்து நீட்டினபோது நம்ப முடியாமல் தவித்தது சிரிப்பாய் இருந்தது. இடைவேளையில் கேரியரைத் தூக்கிக் கொண்டு என் டேபிளுக்கு வந்து, வறுவலை துவையலை பொரிச்ச கூட்டை இலக்கியத்தை பரிமாறிக் கொள்வது சுவையாய் இருந்தது.

மறந்துபோய்க் கூட முகத்துத் தேமலைக் கேட்கவில்லை. எனக்கே ஒரு சந்தேகம். தேமலே எனக்கு இல்லையோ என்று ஒரு க்ஷண சந்தேகம்.

இல்லாம எங்கு போகும்? ஒவ்வொரு நாள் காலையும் குளித்துத் தலை முடிந்து கொள்கிறபோது கண்ணாடியைப் பார்த்துச் சிரிக்கிற வெள்ளைத்தேமல். எனக்கே இதைத் தொட்டுப் பார்க்கப் பயமாய் இருக்கிறதே. உள் மனசில் என் கண்ணில் கொஞ்சம்கூட அருவருப்புக் காட்டாமல் எப்படி இருக்க முடிகிறது. பத்ரி? ஒரு வேளை, ஊர் முழுக்க சுற்றி விதவிதமான அழகை ரசித்து முதிர்ந்து போனாயோ? அழகில்லாத