பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நாசகாரக் கும்பல்

ம்பி, வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தான். எதிரே சேறும் சகதியுமாயிருந்த வராகக் குளத்தை தூர்த்துக் கொண்டிருந்தார்கள். எதற்காகத் தூர்க்கவேண்டும், சேறும் சகதியுந்தானே வராகருக்கு ஏற்றதொரு இடம் என்று நினைத்தான் அம்பி. ஆனால் பாசி படர்ந்த அவ்விடத்திலிருந்து புறப்பட்டு ஊரில் வியாதியைப் பரப்பும் கொசுவுக்கு வராகர் ஒரு வழி செய்வாரானால், அவர் உவக்கும் இடத்தை அப்படியே விட்டு வைத்திருக்கலாம்... “கொசு ஓர் அரக்கன்; அவனை அழிக்க ஒரு புது அவதாரம் தேவை...’ அம்பியின் கற்பனை அவனுக்கே சிரிப்பைத் தந்தது.

“என்னடா, காலங்காத்தாலே திண்ணையிலே உட்கர்ந்திண்டு காலை ஆட்டிண்டிருக்கே?”

கிட்டு, கையில் பட்டமும் நூற்கண்டுமாக நின்று கொண்டிருந்தான். அவனுக்கு அம்பியைக் கண்டால் கொஞ்சம் பொறாமை... வாத்தியார் மகனாக இருந்தாலும், படிப்பில் அம்பியை மிஞ்ச முடியவில்லை. இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சையில் அம்பி ராஜ்யத்திலேயே முதலாவதாக வருவான் என்று அவன் அப்பாவே சொல்லிக் கொண்டிருந்தது. கிட்டுவுக்கு எரிச்சலைத் தந்தது.

“பட்டம் விடப் போறயா, நானும் வரட்டுமா?” “உனக்கு என்ன பட்டம் விடத் தெரியும்?... நாலு பாடத்தைப் பொட்டை நெட்டுரு போட்டு மார்க் வாங்கத் தெரியும்... அவ்வளவுதானே?”

“அம்பிக்கு அவமானமாக இருந்தது. அவனை யாருமே விளையாடச் சேர்த்துக் கொள்வதில்லை. விளையாட வேண்டுமென்ற ஆர்வமிருந்தாலும், விளையாட்டில் அவனுக்குத் திறமை போதாது. படிப்பில் கெட்டிக்காரனாக இருந்து என்ன பயன்? இந்த வயதில், விளையாட்டில் சூரனாக இருந்தால்தான் எல்லாரும் மதிக்கிறார்கள். பள்ளிக்கூட விளையாட்டுப் போட்டி ‘சாம்பியன்’ கதிர்வேலுவைத்தான் எல்லாருக்கும் தெரியும்.