பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

238

சோலை சுந்தரபெருமாள்


அம்பியை யாருக்குத் தெரியும்? வயசான வாத்தியார்கள் வேண்டுமென்றால், அவனைத் தட்டிக் கொடுக்கலாம்... ஆனால்?. கதிர்வேலுக்கு. அந்த வெறுந்தடியனுக்கு, ராதா காதல் கடிதம் எழுதினாளே, தன்னை ஒரு தடவையாவது பார்த்துப் புன்னகை செய்திருப்பாளா? ‘அம்பி கெட்டிக்காரப் பையன், நல்ல மாதிரி சே... இந்தப் பட்டங்களைச் சுமந்து கொண்டிருப்பதினால் அவனுக்கு என்ன பிரயோஜனம்?

கிட்டு போய்விட்டான்... அம்பிக்கு அழுகை வரும் போலிருந்தது...

அப்பொழுது ஒரு பஸ் வரும் சப்தம் கேட்டது. அம்பி உட்கார்ந்தபடியே தலையை நீட்டித் தெருக்கோடியை நோக்கினான். கருணுடூரிஸ்ட் பஸ். ஏன் இந்தப் பக்கம் வருகிறது? அவனுக்கு ஞாபகம் வந்தது. வழக்கமான பாதையில் குழி தோண்டி வைத்திருக்கிறார்கள்.

டூரிஸ்ட் பஸ்... பேர்தான் டூரிஸ்ட் பஸ்... அது டூரிஸ்ட் பஸ்ஸே இல்லை. தினசரி இரவு வெளியூர்களுக்கும், வெளியூர்களிலிருந்தும் பிரயாணிகளை ஏற்றிக் கொண்டு போய் வருகிறது. நடத்துகிறவர், ஆளுங்கட்சிப் பிரமுகர். அரசாங்கம் காந்திஜிக்குப் பிடித்த குரங்கு; தீமையைப் பார்க்காது. கண்ணை மூடிக் கொள்ளும். -ஒருவேளை இரவு வேளைகளில் அரசாங்கம் தூங்கி விடுகிறதோ என்னவோ? அம்பிக்குத் தான் கெட்டிக்காரன் என்று பட்டது. தன்னை ஒத்த மற்றவர்களுக்கு இந்த வயதில் இந்த மாதிரியெல்லாம் தோன்றுமோ? கெட்டிக்காரனாக இருப்பதோடு மட்டுமல்லாமல், விளையாட்டிலும் புலியாக இருந்தால்?... ஒரு ராதா என்ன, ஒன்பது ராதாக்கள் கடிதம் எழுதலாம்.

பஸ் அருகில் வந்துவிட்டது. சிகப்பு நிற பஸ். அம்பியின் வீட்டருகே வந்ததும் பஸ் சற்று யோசிப்பது போல், தயங்கி நின்றது. அவன் வீட்டெதிரே, குளத்துக்கும், கோயிலுக்குமிடையே இடைவெளியில் போகிறானோ?...

தான் நினைத்தது சரிதான்... “ரிவர்ஸ் செய்யத்தான் பஸ்ஸை இங்கு கொண்டு வந்திருக்கிறான். பூதாகாரமான பஸ். இந்தச் சிறிய இடைவெளி போதுமோ? கண்டெக்டர் பஸ்ஸை விட்டுக் கீழே இறங்கவில்லை. பின்புறத்துக் கண்ணாடி வழியாகப் பார்த்துக்கொண்டே ‘எஸ்...எஸ்...எஸ்’ என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

பஸ் பின்பக்கம் நகர்ந்தவாறு திண்ணையருகே வந்தது. அம்பி காலைத் தூக்க வேண்டுமா என்று ஒரு கணம் நினைத்தான்... அப்படிப் பார்க்காமலேயா இருந்துவிடப் போகிறான், கண்டக்டர்?