பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

238

சோலை சுந்தரபெருமாள்


“நான் பக்கத்து வீட்டிலே குடியிருக்கேன்... நான் யாராயிருந்தா உனக்கென்ன?”

டிரைவர் கண்டக்டரிடம் சொன்னான், “ராஜா, பையனைத் தூக்கி வண்டியிலே எடுத்துட்டுப் போவோம் வா... டைம் வேஸ்ட் ஆகிகிட்டிருக்கு...”

அம்பியின் அம்மா அவன் உடம்பைக் கட்டிக்கொண்டு அழுது கொண்டிருந்தாள்.

“பெரியம்மா... சொல்றத்தைக் கேளுங்க. நானும் பிள்ளை குட்டிக்காரன்... தெரியாத்தனமா வண்டியை ஏத்திட்டேன்... முதல்லே குழந்தையை ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டுப்போவோம். தயவு செய்து பையனை விடுங்க... நீங்களும் கூட வாங்க...”

“ஏதாவது பொய் ஸ்டேட்மெண்ட் கொடுத்து கையெழுத்து வாங்கிக்கலாம்னு பாக்கறயா? கனகாமாமி, போகாதீங்க...”

புதுக்குரல் கேட்டதும் டிரைவர் திரும்பினான். நெற்றியில் திருநீறு சந்தனப்பொட்டு, நாற்பது வயதிருக்கும் அவருக்கு. குழந்தை துடித்துக் கொண்டிருக்கிறான். சட்டம் பேசுகிறார்களே படுபாவிகள்! டிரைவர் சிறினான். “ராஜா, பையனைத் தூக்கு... ஹீம் சீக்கிரம்.”

“அட நீங்கதானா சட்டம் பேசறது...? இவர் யாரு தெரியுமில்லே அண்ணே, வக்கீல் குமாஸ்தா பாலு அய்யர்” என்றான் ராஜூ.

“அவர் யாரா வேனுமானாலும் இருக்கட்டும், குழந்தையக் கொஞ்சம் பிடி...”

“போலீஸ் வந்தப்புறம் போகலாம்...” என்றார் பாலு அய்யர்.

“பையன் செத்துப் போயிடுவான்யா, ஈவு இரக்கமற்ற படுபாவியா இருக்கியே!”

“வண்டியை ஏத்தரச்சே, இந்த ஈவு இரக்கமெல்லாம் எங்கே போச்சு...? நியாயம் பேசறான், நியாயம்... நான் சட்டம் தெரிஞ்சவன், என்னை ஏமாத்த முடியாது...”

“பெரியம்மா... பையன் உங்க பையன்... என்னை நம்புங்க... நான் திரும்பி வரேன்... எவ்வளவு ஸ்டேட்மெண்ட்லே வேனுமானாலும் கையெழுத்துப் போடறேன்... பையனுக்கு ரத்தம் போய்கிட்டே இருக்கு. ஆஸ்பத்திரிக் கேஸ். போலீஸ் எப்பொ வர்றாங்களோ, காத்துக்கிட்டிருக்க முடியுமா? சீக்கிரம் சொல்லுங்க...”

அழுது கொண்டிருந்தவள் அவனை ஏறிட்டு நோக்கினாள். “சரி, எடுத்துண்டு போ... நானும் வரேன்..”

டிரைவர் பையனைத் தூக்கி ராஜூவின் உதவியைக் கூட எதிர்பார்க்காமல், வண்டிக்குள் கொண்டுபோய் சீட்டில் கிடத்தினான். அம்பியின் அம்மாவும் வண்டிக்குள் ஏறினாள்.