பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பேயாண்டித்தேவரும்
       ஒரு கோப்பைத் தேநீரும்

'காலம்பற கரெக்டா ஆறு மணிக்கு வந்துடறேன்னு போனவன் இன்னும் காணல. சட்டுனு வந்துடு, வெயிலுக்கு முன்னாடி போயிட்டு வந்துருவோம். கிட்டனுகலா இருக்குன்னு சொன்னதுக்கு அப்படி சொல்லிப்புட்டு போனான் ஆளக் காணுமே.”

இளவெயில் முதுகுக்கு இதமாக இருந்தது. முகத்தில் பட்டால் மயக்கம் வரும். வயதானதினால் தெம்பு வடிந்து அடித்துப்போட்டது போல உடம்பு இருந்தது. குளிரில் ஈரக்குலை நடுங்கியது. தொண்டையில் வலி பின்னி மூச்சுவிட சிரமமாக இருந்தது. காறித் துப்பிக் கொண்டிருந்ததில் உள்நாக்கு வலித்தது. மூக்கு வழியாக மூச்சுவிட முடியவில்லை. வாயை அகலத் திறந்து கப்கப்பென்று காற்றை உறிஞ்சி விடும்போது மார்புக் கூட்டுக்குள் ஒரு இரைப்பு எலி உட்கார்ந்திருந்தது.

சூடாக ஒரு டீ குடித்தால் தேவலாம் போலிருந்தது.

‘அந்தப் பய மவன் வந்தா, எப்படியும் ஒரு டீ வாங்கித் தருவான். எப்ப வருவான்னு தெரியல’ -மனதுக்குள் புலம்பிக் கொண்டே பேயாண்டித் தேவர் கண்களை இறுக மூடிக்கொண்டார். நெற்றிப் பொட்டு விண் விண் என்று தெறித்தது.

“என்னா தாத்தா உக்காந்துட்டே”

குரல் கேட்டு மெதுவாக கண்களைத் திறந்தார்.

எதிரே மேலத்தெரு முத்தையனின் எட்டு வயது மகள்.

“எங்க போயிட்டு வர்ற”

“டீ வாங்கிட்டு வாறேன்”

கையிலிருந்த சிறு எவர்சில்வர் தூக்கைக் காண்பித்தாள். பாத்திரத்தில் தேநீர் வழிந்து கோடுகள் இருந்தன.

“டீய தாத்தாவுக்குத் தாயேன்”